திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று விடுமுறை அறிவிக்காததால் மழையில் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள்-நனைந்தபடி வீடுகளுக்கு திரும்பினர்

வேலூர் : வட தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இடையே ஓரிரு நாட்கள் லேசான மழை பெய்து நின்ற நிலையில் நேற்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இதனால் திருப்பத்தூர் தவிர மற்ற மாவட்டங்களுக்கு அந்தந்த கலெக்டர்கள் விடுமுறை அளித்திருந்தனர்.

ஆனால் திருப்பத்தூர் மாவட்டத்திலும் நேற்று மழை கொட்டியது. இதனால் காலை 7 மணி வரை பள்ளிகள், கல்லூரில் இயங்குமா? அல்லது விடுமுறை விடப்படுமா? என மாணவ, மாணவியர் மற்றும் அவர்களது பெற்றோர், பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலருக்கு போன் மூலம் தகவல் கேட்டனர்.

பின்னர், மாவட்ட நிர்வாகத்தின்  சார்பில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் நேற்று விடுமுறை என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவிப்பு வெளியானது. இதை தொடர்ந்து மழையில் மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் உள்ளிட்ட இதர பணியாளர்கள் பள்ளிகளுக்கு சென்றனர்.  பல இடங்களில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ள இடங்களில் வெள்ளநீர் புகுந்தது. கானாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாலும், விடாது தொடர்ந்து பெய்த கனமழையால் பள்ளி சென்ற மாணவ, மாணவியர் வீடு எப்படி திரும்புவர் என பெற்றோர் உள்ளிட்ட மாணவ, மாணவியரின் குடும்பத்தினர் தவித்தனர்.  

தொடர்ந்து நிற்காமல் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில், நேற்று மதியம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மதியம் மற்றும் நாளை (இன்று) வெள்ளிகிழமை திருப்பத்தூர் மாவட்டத்தில் இயங்கும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு  விடுமுறை என மாவட்ட நிர்வாகம் சார்பாக கலெக்டர் உத்தரவிட்டார். இதைதொடர்ந்து பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டது. இதனால், பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவியர் மழையில் நனைந்தபடி வீடு திரும்பினர்.

Related Stories: