×

விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் வெள்ளம்: பல இடங்களில் போக்குவரத்து துண்டிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. செஞ்சி சுற்றுவட்டார பகுதிகளில் குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் விழுப்புரம் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. திண்டிவனம் அடுத்த வீடூர் அணை அதன் முழு கொள்ளளவான 32 அடியை எட்டியதால் அணையில் இருந்து 32,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கரையோரங்களில் உள்ள 20 கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

திருப்பாச்சனூர் மலற்றாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அங்குள்ள தரைப்பாலம் மூழ்கியுள்ளது. இதனால் விழுப்புரம் - திருப்பாச்சனூர் இடையேயான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. நேற்று ஒருநாள் பெய்த பலத்த மழையால் செஞ்சியில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சக்கராபுரம் மற்றும் காவலர் குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. செஞ்சி, திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் ஆறு போல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் கரையோரம் உள்ள மக்களை தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றினர். செஞ்சி - சேத்பட் சாலையை வெள்ளம் மூழ்கடித்ததால் அந்த சாலையில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. தீபத்திருவிழாவிற்கு திருவண்ணாமலை நோக்கி சென்ற வாகனங்களும் மாற்று வழியில் திருப்பி அனுப்பப்பட்டன.

செஞ்சியை அடுத்த தளவானூர் கிராமத்தில் நீர்நிலைகள் முழுவதும் நிரம்பியுள்ளது. மலையோரத்தில் உள்ள குளத்தில் உடைப்பு ஏற்பட்டு விளைநிலங்களை சூழ்ந்துள்ளது. மழை தொடர்வதால் ஊருக்குள்ளேயும் வெள்ளம் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தளவானூர் - கல்லாளிப்பட்டு சாலையை தாண்டி வெள்ளம் பாய்வதால் அந்த சாலையில் போக்குவரத்து தடைபட்டுள்ளது.

விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றின் கிளை ஆறான கோரையாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மாரந்தியூர், சேத்தூர் கிராமமக்கள் அத்தியாவசிய தேவைக்கு கூட வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மின்கம்பங்கள் ஆற்றில் சாய்ந்துள்ளதால் இரு கிராமங்களிலும் மின்சாரமும் தடைபட்டுள்ளது. கோரையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக தற்காலிக தரைபாலமும் அடித்து சென்றுவிட்டது. இதனால் விழுப்புரத்தில் 35 கி.மீ தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மணிமுக்தா ஆற்றில் இருந்து வினாடிக்கு 12,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராயபுரம், பாலப்பட்டு, வீரசோழபுரம், வடபூண்டி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளன. இதேபோல் உளுந்தூர்பேட்டை அருகே பாண்டூர் கிராமத்தில் சாலையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆத்தூர் அடுத்து கோட்டயபாளையம் தரைப்பாலம் உடைந்ததால் மக்கள் ஆபத்தான நிலையில் பாலத்தை கடந்து வருகின்றனர்.

Tags : Vampuram district , rain
× RELATED விழுப்புரம் மாவட்டத்தில் வாரிசு...