பழநி வனப்பகுதி எல்லையில் யானைகள் உலா-இரவு நேரங்களில் மக்கள் நடமாட வேண்டாமென எச்சரிக்கை

பழநி : பழநி வனப்பகுதி எல்லைகளில் உலா வரும் யானைகளால் பொதுமக்கள் இரவு நேரங்களில் நடமாட வேண்டாமென வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

 திண்டுக்கல் மாவட்டத்திலேயே 18 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பெரிய வனப்பரப்பை கொண்டது பழநி வனச்சரகம். இவ்வனப்பகுதியில் வரிப்புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், காட்டெருமை, கேளையாடு உள்ளிட்ட விலங்கினங்கள் உள்ளன. இந்த விலங்கினங்கள் அடிக்கடி விளைநிலங்களுக்குள் புகுந்து வந்தன. இதனை தடுக்க வனத்துறையினர் அகழி அமைத்தல், சோலார் மின்வேலி அமைத்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.    

இந்நிலையில் கடந்த வாரம் கொடைக்கானல் சாலையில் உள்ள இந்துமதி என்பவரது தென்னந்தோப்பிற்குள் புகுந்த யானைக்கூட்டம் தென்னை மரங்களை சேதப்படுத்தியது. தகவலறிந்த பழநி வனத்துறையினர் வனச்சரக அலுவலர் பழனிக்குமார் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்து யானை கூட்டத்தை வனப்பகுதிக்குள் விரட்டி விட்டனர். இதுகுறித்து பழநி வனச்சரகர் பழனிக்குமார் கூறியதாவது, ‘மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் பழநி வனப்பகுதி எல்லைகளில் உள்ள பாலாறு- பொருந்தலாறு அணை நிரம்பி உள்ளது. இதனால் யானைகளின் வழித்தடம் தடைபட்டு, இடம் பெயர்ந்து  செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, 10க்கும் மேற்பட்ட யானைகள் ஆங்காங்கே சுற்றி திரிந்து வருகின்றன. எனவே தேக்கந்தோட்டம், புளியமரத்து செட், சென்னை கோவில் பாறை, கத்தாளம்பாறை, ரெங்கமலை பாதம் உள்ளிட்ட இடங்களில் வசிப்பவர்கள் மாலை 5 மணி முதல் காலை 7 மணி வரை வனப்பகுதி எல்லைகளின் அருகில் நடமாட வேண்டாம். யானைகளின் நடமாட்டம் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும். வனவிலங்குகள் பயிர்கள் சேதடையும் பட்சத்தில் இழப்பீடு, நிவாரணம் பெற்றுத்தரவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றார்.

Related Stories:

More