தொடர் கனமழையால் பழநியில் கழிவுநீர் கால்வாய்கள் சேதம்-எம்எல்ஏ அறிவுறுத்தலால் சீரமைப்பு பணி தீவிரம்

பழநி : பழநி நகர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக நேற்று முன்தினம் இரவு பழநி பகுதியில் பெய்த மழையின் அளவு 68 மிமீ பதிவாகி உள்ளது. ரூ.58 கோடியில் பழநி பகுதியில் மேற்கொண்ட சாலை பணியில் வடிகால் சரிவர அமைக்கப்படவில்லை. இதனால் பஸ் நிலையம் சாலை, ரயில்வே பீடர் சாலை, சுப்பிரமணியபுரம் சாலை, கவுண்டர் இட்டேரி சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது.

வாகனங்கள் நீரில் மிதந்து சென்றன. போதிய வடிகால் வசதி இல்லாததால் இந்திரா நகர், கவுண்டன் குளம், ஏசிசி சாலைகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் இதனால் பல வீடுகளில் உள்ள மின்சாதன பொருட்கள் நாசமாயின. பல வீடுகளில் தண்ணீர் வடியும் வரை இரவு முழுவதும் கண்விழித்து காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

கவுண்டர் இட்டேரி சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாய் இடிந்து விழுந்ததால், சாலையில் கழிவுநீர் வழிந்தோடியது. இவற்றை உடனடியாக சீரமைக்குமாறு பழநி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார் நகராட்சி அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

இதை தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் நேற்று இடிந்த கழிவுநீர் கால்வாய் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஜேசிபி இயந்திரங்கள் மூலம் கால்வாய்க்குள் விழுந்த கட்டிட இடிபாடுகளை அகற்றினர். அதன்பின் கழிவுநீர் தங்கு தடையின்றி சென்றது.

Related Stories:

More