திருவண்ணாமலை: ஏகன், அனேகன் இறைவனடிபோற்றி...! ஒருவனான இறைவனே பஞ்சபூதங்களாய் (அனேகன்) காட்சியளிக்கிறான் என்ற தத்துவத்தை விளக்கும் பரணிதீபம், அண்ணாமலையார் சன்னதியில் ஏற்றப்பட்டது.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா, கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. கொரோனா பரவல் காரணமாக 2வது ஆண்டாக தீபத்திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதேபோல், மாடவீதியில் நடைபெறும் சுவாமி திருவீதியுலா, வெள்ளித் தேரோட்டம், பஞ்ச ரதங்கள் பவனி ஆகியவையும் ரத்து செய்யப்பட்டன.
அதற்கு மாற்றாக, அண்ணாமலையார் கோயில் 5ம் பிரகாரத்தில் சுவாமி உலா நடந்தது. அதிலும், பக்தர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கவில்லை. மேலும், நேற்று முன்தினம் முதல் நாளை வரை கோயிலுக்குள் செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கிரிவலம் செல்வதும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவதாக அரசு தரப்பில் நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் தீபத்திருவிழா உற்சவத்தின் நிறைவாக இன்று மகாதீப பெருவிழா நடக்கிறது. இதையொட்டி, இன்று அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயில் சுவாமி சன்னதி முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது..பின்னர் கோவில் சிவாச்சாரியார்கள் பரணி தீபத்தை கைகளில் ஏந்தியபடி 2ம் மற்றும் 3ம் பிரகாரங்களில் அம்மன் சன்னதிகளை வலம் வந்தனர்.முன்னதாக அதிகாலை 3 மணிக்கு அண்ணாமலையார் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றன.
தொடர்ந்து, மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றப்படுகிறது. இதற்காக நேற்று காலை தொடர் மழையையும் பொருட்படுத்தாமல், திருப்பணியாளர்கள் தோளில் சுமந்தபடி 130 கிலோ எடையுள்ள தீபக் கொப்பரையை மலைக்கு கொண்டு சென்றனர். மேலும், மகாதீபம் ஏற்றுவதற்கு ஆயிரம் மீட்டர் திரி, 3,500 கிலோ நெய் பயன்படுத்தப்படுகிறது. அவை இன்று காலை மலைக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்நிலையில், மகாதீபம் ஏற்றும்போது அண்ணாமலையார் கோயிலில் மாலை 3 மணி முதல் சிறப்பு வழிபாடுகள், பஞ்சமூர்த்திகள் எழுந்தருளல், அர்த்தநாரீஸ்வரர் தரிசனம் ஆகியவை நடைபெறும். ஆனால், அண்ணாமலையார் கோயிலுக்குள் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மலைக்கு செல்லவும் தடை செய்யப்பட்டுள்ளது.