தமிழகம் முழுவதும் பல இடங்களில் மழை நீடிப்பு டெல்டாவில் 70,000 ஏக்கர் பயிர்கள் மீண்டும் நீரில் மூழ்கியது: பல இடங்களில் மண் சரிவு; மின்சாரம் துண்டிப்பு

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த 6ம் தேதி முதல் 11ம் தேதி வரை மழை பெய்தது. 3 நாட்களாக மழை விட்டிருந்த நிலையில், வங்க கடலில் அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு உருவானதால் நேற்றுமுன்தினம் மாலை முதல்  மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது. டெல்டா மாவட்டங்களிலும் மழை கொட்டி தீர்த்தது. ஏற்கனவே பெய்த மழையில் 1.70 லட்சம் ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் நீரில் மூழ்கின. இதில் 1 லட்சம் ஏக்கர் அளவுக்கு சேதமடைந்தது. எஞ்சிய பயிர்களில் தண்ணீரை வடிய வைத்தும், அடியுரமிட்டும் காப்பாற்றும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டனர்.  இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்ததால் 70,000 ஏக்கரில் பயிர்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை துவங்கி விடிய விடிய இடி மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. ஊட்டி நகரில் சேரிங்கிராஸ், படகு இல்ல சாலை, கூட்ஷெட் உள்ளிட்ட பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. வாகனங்களும் சிக்கி கொண்டன. 200க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. மின்கம்பங்கள் சேதமடைந்து மின் துண்டிப்பு ஏற்பட்டது. ஊட்டி அருகே எல்க்ஹில், வண்டிசோலை உள்ளிட்ட பகுதிகளில் பெரிய அளவிலான மண்சரிவுகள் ஏற்பட்டன. மேலும், ஊட்டியில் இருந்து அணிக்கொரை, எப்பநாடு, கேத்தி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலைகளில் மண்சரிவு ஏற்பட்டது.

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதியான தாண்டிக்குடி - தடியன்குடிசை பிரதான சாலையில் கானல்காடு அருகே ராட்சத மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வீடு, கடைகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.  ஜல்லி குளம் பகுதியில் உள்ள 150 குடியிருப்புக்குள் வெள்ளத்தில் சிக்கிய 120 பேரை மீட்டு திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைத்துள்ளனர். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று முன்தினம் 3 மணி நேரத்திற்கு மேல் கனமழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து நள்ளிரவு வரை மிதமான மழை பெய்தது. இதனால் நெல்லையில் 400க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.  

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் தொடர்மழையால் ஏரிகள் நிரம்பி தெருக்களில் வெள்ளம் சூழ்ந்ததால் நேற்று காலை மக்கள் மறியலில் ஈடுபட்டனர். பள்ளி கட்டிடம் இடிந்து தரைமட்டமானது: கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த வானதி ராயபுரம் ஊராட்சியில் ஒன்றிய நடுநிலைப்பள்ளி கடந்த 1995ல் கட்டப்பட்டது.மழை காரணமாக பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று அதிகாலை பள்ளி கட்டிடம் திடீரென்று இடிந்து விழுந்து தரைமட்டமானது. விடுமுறை என்பதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. ஆட்டோ  அடித்து செல்லப்பட்டு தந்தை பலி; மகன் மீட்பு: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலம், ராமசந்திராபுரத்தை சேர்ந்தவர் சின்னசாமி (70). இவர், மகன் செல்வக்குமாருடன் (42) விவசாய நிலத்தினை பார்வையிடநேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் ஆட்டோவில் சென்றுள்ளார்.

அப்போது,  ராமசந்திராபுரம்-சலவபாளையம் இடையே தரைபாலத்தில் சென்ற வெள்ளத்தில் ஆட்டோ அடித்து செல்லப்பட்டது. தீயணைப்பு படையினர் நேற்று அதிகாலை கருவேலமரம் ஒன்றினை பற்றியபடி தவித்த செல்வக்குமாரை மீட்டனர். சின்னசாமியின் உடல் முட்புதர் ஒன்றில் சிக்கிய நிலையில் மீட்கப்பட்டது.

ரயில்வே சுரங்கப்பாதையில் சிக்கிய பஸ்: புதுச்சேரியில் இருந்து திருப்பதிக்கு நேற்று 8 பயணிகளுடன் சென்ற அரசு பஸ் திண்டிவனம் ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய வெள்ள நீரில் சிக்கிக் கொண்டது. போலீசாரும் நகராட்சி அலுவலர்களும் பொக்லைன் இயந்திரம் மூலம் அரசு பேருந்தை பயணிகளுடன் மீட்டனர்.

வெள்ளத்தில் மிதக்கும் புதுச்சேரி

புதுச்சேரியில் நேற்று அதிகாலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.  முக்கிய சாலைகள், சந்திப்புகள், வீதிகள் என எங்கும் வெள்ளக்காடானது. தாழ்வான பகுதிகளான கிருஷ்ணா நகர், ரெயின்போ நகர்,   பாவாணர் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் மழைநீரில் மூழ்கியது. புதுச்சேரி முழுவதும் வெள்ளத்தால் தத்தளிக்கிறது. இந்திராகாந்தி சதுக்கம், சிவாஜி சிலையை சுற்றிலும் தண்ணீர் தேங்கியதால், கடலூர், விழுப்புரம், சென்னை செல்லும் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றது.2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. காலை 8.30   முதல் மாலை 5.30 மணி வரை 15 செமீ மழை பதிவாகியுள்ளது. மீட்பு பணிக்காக அரக்கோணத்தில் இருந்து 25 பேர் கொண்ட பேரிடர் மீட்புக்குழு புதுச்சேரி விரைந்துள்ளது.

20 ரயில்கள் ரத்து

குமரி மாவட்டத்தில் மழை காரணமாக 13 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டிருந்த நிலையில் 10 இடங்களில் சீர் செய்யப்பட்டுள்ளது. பள்ளியாடி பகுதியில் மற்றொரு இடத்தில் நேற்று மண் சரிவு ஏற்பட்டது. இதனால் நாகர்கோவில்-திருவனந்தபுரம் ரயில் பாதையில் இன்றும் (19ம் தேதி) 20 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பைக்குடன் அடித்து செல்லப்பட்ட வாலிபர்

வேலூர் அடுத்த விரிஞ்சிபுரம் பாலாறு தரைப்பாலம் மழை வெள்ளத்தில் மூழ்கியது. போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட தடையை மீறி நேற்று மாலை 5 மணியளவில் 25வயது வாலிபர் ஒருவர், பைக்கில் கடக்க முயன்றார். அப்போது, பாலாற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் அவர் பைக்குடன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். சிலர் வெள்ளத்தில் குதித்து வாலிபரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் வாலிபரை மீட்க முடியவில்லை.

Related Stories:

More