×

தடுப்பை அகற்ற கோரி திருவள்ளூர் ரயில்வே மேம்பாலம் மீது கொட்டும் மழையில் மறியல்

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த பெரியகுப்பம் வரதராஜன் நகர் பகுதியில் சுமார் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். திருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து பொதுமக்கள் செல்லும் பாதையில் ரயில்வே துறை சார்பாக  தடுப்பு அமைத்துள்ளனர். இதனால் வரதராஜன் நகர் உள்பட பல்வேறு நகர் பகுதிகளுக்கு பொதுமக்கள் கூவம் ஆற்று தரைப்பாலம் வழியாக  சென்று வந்தனர். ஏற்கனவே பழுதடைந்த இந்த பாலத்தின் மீது பொதுமக்கள் சென்று வந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அந்த பழுதடைந்த பாலமும் உடைந்துவிட்டது. இதனால் இரு சக்கர வாகனம் மற்றும் ஆட்டோ கார் போன்ற வாகனங்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

   இதனையடுத்து வரதராஜன் நகர் பகுதியைச் சேர்ந்த 300 க்கும் மேற்பட்டபெண்கள், ஆண்கள் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் திருவள்ளூர் - மணவாள நகர் ரயில்வே மேம்பாலம் மீது கொட்டும் மழையில் குடையுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த திருவள்ளூர் வட்டாட்சியர் ஏ.செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Thiruvallur Railway , Request to remove the block, Tiruvallur, railway flyover, picket
× RELATED பெரியகுப்பத்தில் உள்ள கோயிலில் பஞ்சலோக சிலை திருட்டு