×

நடிகர் சூர்யா படத்தை எரித்து பாமகவினர் ஆர்ப்பாட்டம்

மாமல்லபுரம்: ஜெய்பீம் படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தி உள்ளதாக கூறி, மாமல்லபுரத்தில் நடிகர் சூர்யாவின் படத்தை எரித்து பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நடிகர் சூர்யா தயாரித்து, அவர் நடித்து வெளியான ‘ஜெய்பீம்’ என்ற திரைப்படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தி படக்காட்சிகள் அமைந்துள்ளதாக கூறி எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும், நடிகர் சூர்யா வருத்தம் தெரிவிக்க கோரியும், பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் தமிழகம் முழுவதும் அப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, காவல் நிலையங்களில் புகார் மனு அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், மாமல்லபுரம் கங்கை கொண்டான் மண்டபம் அருகே ஜெய்பீம் படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்திய நடிகர் சூர்யா வருத்தம் தெரிவிக்க வேண்டும் என கோரி,  பாமக மாவட்ட செயலாளர் காரணை ராதாகிருஷ்ணன் தலைமையில், மாமல்லபுரம் பாமக நகர செயலாளர் ராஜசேகர் முன்னிலையில் பாமகவினர் சூர்யாவின் படத்தை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.  இதையடுத்து, மாமல்லபுரம் போலீசில் ஜெய்பீம் திரைப்படத்தில், வன்னியர் சமுதாயத்தை இழிவுபடுத்தியதாக கூறி பட இயக்குனர் ஞானவேல், நடிகர் சூர்யா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என இன்ஸ்பெக்டர் மணிமாறனிடம் புகார் அளித்தனர். பின்னர், அவர்கள் கலைந்து சென்றனர்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட பாமக செயலாளர் உமாபதி, சிவகாஞ்சி போலீசில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது. ஜெய் பீம் திரைப்படத்தில் வன்னியர்களின் புனித சின்னமான அக்னி கலசம் உள்ள நாள்காட்டியை கொடூர ஆய்வாளராக வருபவர் வீட்டில் மாட்டி வைத்துள்ளனர். அந்த ஆய்வாளர் வன்னியர் சமூகத்தை சார்ந்தவர் என சாதி வன்மத்தோடு உண்மையை மறைத்து காட்டியுள்ளனர். மேலும் அந்த ஆய்வாளருக்கு வன்னிய சமூக இளைஞர்களின் மனதில் மறைந்து மறையாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் குரு பெயரை வைத்து வன்னியர் சமுதாயத்துக்கும், குருவின் பெயருக்கும் ஜெயபீம் திரைப்படத்தின் மூலம் களங்கம் ஏற்படுத்தியுள்ளனர்.

எனவே, திரைப்படத்தில் நடித்த சூர்யா, இயக்குநர் ஞானேவேல் ஆகியோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அப்போது, முன்னாள் எம்எல்ஏ சக்தி கமலம்மாள், இளைஞரணி செயலாளர் மகேஷ்குமார், பாமக துணை தலைவர் செந்தில்குமார் உள்பட பலர் இருந்தனர்.

Tags : Surya , Actor Surya, Bamaka, Demonstration,
× RELATED சூரிய பகவானின் தேரைக் கொண்ட சூரிய கோயில்