×

அருணாச்சல பிரதேச எல்லையில் 2வது கிராமம் அமைக்கிறது சீனா: செயற்கைக்கோள் புகைப்படத்தில் அம்பலம்

புதுடெல்லி: அருணாச்சல பிரதேசத்தில் 2வது கிராமத்தை சீனா உருவாக்கி வருவதற்கான புதிய செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அருணாச்சல பிரதேசம் தங்கள் நாட்டுக்கு சொந்தமானது என்று சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இந்நிலையில், அசல் கட்டுப்பாட்டு கோடு ஒட்டிய பகுதியில் அமைதியாக ஆக்கிரமிப்பு பணிகளை சீனா செய்து வருகிறது. இம்மாநில எல்லையில் 100 வீடுகளை கட்டி ஒரு கிராமத்தை சீனா முதலில் உருவாக்கியது. இது செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் தெரியவந்தது. இதை அமெரிக்காவும் உறுதி செய்தது.

இந்நிலையில், அசல் கட்டுப்பாட்டு கோடுள்ள இந்திய எல்லைக்குள் 6 கிமீ தொலைவில் 60 வீடுகள் கொண்ட ஒரு கிராமத்தை சீனா உருவாக்கி வருகிறது. இதற்கான செயற்கைக்கோள் புகைப்படங்களும் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து இந்திய ராணுவ உயரதிகாரிகள் கூறுகையில், ‘அசல் கட்டுப்பாட்டு கோட்டின் வடக்கு பகுதியில் தான் அவர்கள் கிராமத்தை உருவாக்கி வருகிறார்கள்’ என்று தெரிவித்தார்கள்.  அது இந்தியாவுக்கு சொந்தமான பகுதியா என்பதை அவர்கள் கூறவில்லை. ஆனால், சீனா கிராமத்தை உருவாக்கி வருவதை இந்திய ராணுவம் மறுக்கவில்லை.


14வது சுற்று
பேச்சுவார்த்தை
கிழக்கு லடாக் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள இருநாட்டு ராணுவத்தையும் திரும்பப் பெறுவது தொடர்பாக இந்தியா - சீனா இடையே விரைவில் மீண்டும் பேச்சுவார்த்தை நடக்க இருக்கிறது. ஏற்கனவே நடந்த 13 சுற்று பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், 14வது சுற்று பேச்சுவார்த்தைக்கு இரு நாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளன. இது எப்போது நடக்கும் என்று கூறப்படவில்லை.

காங்கிரஸ் கேள்வி
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கவுரவ் வல்லப் நேற்று அளித்த பேட்டியில், ‘இந்திய எல்லைக்குள் சீனா 100 சதுர கிமீ தூரத்துக்கு ஊடுருவி உள்ளது. இந்த எல்லைகளில் 4 கிராமங்களை அது அமைத்து வருகிறது. தேசிய பாதுகாப்பு மற்றும் இந்தியாவின் ஒருங்கிணைந்த எல்லை பகுதிகளை ஒன்றிய பாஜ அரசு சமரசம் செய்து கொண்டுள்ளது. ஏன், இந்தியா அமைதி காக்கிறது என்று தெரியவில்லை. எனவே, இதன் பின்னணியை மறைக்காமல் பிரதமர் மோடி, மக்களுக்கு பதிலளிக்க வேண்டும்,’ என்று கூறினார்.



Tags : China ,Arunachal Pradesh , Arunachal Pradesh, border, China, satellite,
× RELATED மீண்டும் சீண்டும் சீனா மோடியின் சீனா...