சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ஆன்லைனில் கிடையாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: சிபிஎஸ்இ. சிஐஎஸ்சிஇ 10, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை ஆன்லைனில் நடத்துக்கும் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.  சிபிஎஸ்இ, இந்திய பள்ளிகள் கழகம் நடத்தும் சிஐஎஸ்சிஇ பாட திட்டத்துக்கான 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை ஆன்லைனில்  நடத்த உத்தரவிடக் கோரி, இந்த பள்ளிகளில் படிக்கும் 5 மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடர்ந்தனர். அதில், ‘கொரோனாவை காரணமாக 10, 12ம் வகுப்பு செமஸ்டர் தேர்வு உட்பட அனைத்தையும் நேரடியாக நடத்தாமல், ஆன்லைன் மூலம் நடத்த உத்தரவிட வேண்டும்,’ என கோரப்பட்டது.

நீதிபதிகள் ஏ.எம்.கன்வீல்கர் தலைமையிலான அமர்வில் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘தேர்வுகள் நடப்பதை அடிப்படையாக கொண்டு கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் 40 மாணவர்கள் அமர்ந்த தேர்வு அறையில், தற்போது 12 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். தேர்வு மையங்களின் எண்ணிக்கையும் 15 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்போது தேர்வும் தொடங்கி விட்டது. எனவே, மனுதாரர்கள் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும்,’ என தெரிவித்தார். இதை ஏற்ற  நீதிபதிகள், ‘கடைசி நேரத்தில் இது போன்று மனுவை தாக்கல் செய்து கல்வி நடைமுறைகளை சீர்குலைக்க வேண்டாம்,’ எனக் கூறி, மாணவர்களின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Related Stories: