×

அதிக லாபம் தருவதாக கூறி நடிகை சினேகாவிடம் ரூ.26 லட்சம் மோசடி: போலீசார் விசாரணை

சென்னை: சிமென்ட் ஏற்றுமதி தொழிலில் முதலீடு செய்தால் ஒவ்வொரு மாதமும், அதிக லாபம் தருவதாக கூறி, பிரபல நடிகை சினேகாவிடம் ரூ.26 லட்சம் வரை, தனியார் சிமென்ட் நிறுவன இயக்குனர் ஒருவர் மோசடி செய்துள்ளார். இது தொடர்பாக, கானத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திர மாநிலம் திருப்பதியை தலைமையிடமாக கொண்டு, பிரபல சிமென்ட் ஏற்றுமதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. சென்னையை சேர்ந்த சிவராஜ் என்பவர் இதனுடைய இயக்குனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், பிரபல நடிகை சினேகாவிற்கு, அவரது நண்பர் மூலமாக, சிவராஜ் அறிமுகமாகியுள்ளார். இதனையடுத்து, எங்கள் நிறுவனத்தில், அதிக முதலீடு செய்தால், பல மடங்கு லாபம் கிடைக்கும் என கூறியுள்ளார்.

இதை நம்பிய சினேகா, அந்நிறுவனத்துடன் கடந்த மே மாதம் ஈஞ்சம்பாக்கதில் ஒப்பந்தம் செய்து, ஒரு லட்சத்தை ரொக்கமாக கொடுத்தார். மீதமுள்ள 25 லட்சத்தை ஆன்லைன் மூலமாக, சிமென்ட் நிறுவன வங்கி கணக்கில் செலுத்தினார். அதனடிப்படையில், ஒவ்வொரு மாதமும் ஒரு லட்சத்து எண்பதாயிரம் கிடைக்கும் என சிவராஜ் உறுதியளித்தார். அதன்பின், ஒப்பந்தத்தின்படி, சிவராஜ் நடிகை சினேகாவிற்கு பணம் கொடுக்காமல் ஏமாற்றி வந்தார். இதனால், அதிர்ச்சியடைந்த சினேகா பலமுறை அவரிடம் பணம் தருமாறு கேட்டும் சிவராஜ் பணம் தர மறுத்ததோடு, மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, நீலாங்கரை போலீசில் சினேகா நேற்று முன்தினம் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி, சினேகா வீடு, கானத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்டு இருப்பதால், புகாரை கானத்தூர் காவல் நிலையத்துக்கு மாற்றினர். இதையடுத்து, கானத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு, விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு, சம்மன் அனுப்பியுள்ளனர். மேலும், இது தொடர்பாக, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட தொழிலதிபர்களிடமும் போலீசார் விசாரிக்கின்றனர். நடிகை சினேகாவிடம் ரூ.26 லட்சத்தை தனியார் சிமென்ட் நிறுவன உரிமையாளர்கள் ஏமாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Sneha , Actress Sneha allegedly defrauded of Rs 26 lakh
× RELATED இடப்பிரச்னையில் பெண்ணை தாக்கியவர் கைது