தற்கொலைக்கு தூண்டியதாக புகார் கே.பி.அன்பழகன் மீது வழக்கு பதிய கோரி மனு: போலீஸ் பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தற்கொலைக்கு தூண்டியதாக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனுவுக்கு விளக்கமளிக்குமாறு சென்னை போலீசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம், மோளையனூரைச் சேர்ந்த அதிமுக நிர்வாகியும், பஞ்சாயத்து முன்னாள்  தலைவருமான கிருஷ்ணமூர்த்தி என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2011ம் ஆண்டு பஞ்சாயத்து தலைவராக இருந்த போது டெண்டர் ஒதுக்குவது தொடர்பாக முன்னாள் அமைச்சர் பழனியப்பனின் உதவியாளர் வேலாயுதம் என்பவருடன் எனக்கு பிரச்னை இருந்தது. இதையடுத்து, முன்னாள் அமைச்சர் பழனியப்பன் செல்வாக்கில் என்னை பதவியிலிருந்து நீக்கம் செய்தனர்.

 முன்னாள் அமைச்சர் பழனியப்பனுடன் இருந்த அரசியல் மோதலில் என்னை பலிகடாவாக்கும் நோக்கத்துடன் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் என்னை தலைமை செயலகம் முன்பு தீக்குளிக்க முயற்சிக்கும்படி மூளை சலவை செய்தார். இழந்த பதவியை மீண்டும் வாங்கித்தருகிறேன் என்றும் எனக்கு உறுதியளித்தார். அவருக்காக கடந்த 2015 செப்டம்பர் 29ம் தேதி தலைமை செயலகத்தில் ஜெயலலிதா வந்தபோது அவரது காரின் முன்பு நான் தீக்குளிக்க முயன்றேன். என்னை போலீசார் கைது செய்தனர். அரசியல் லாபத்துக்காக என்னை தற்கொலைக்கு தூண்டிய கே.பி.அன்பழகன் மீது வழக்குப்பதிய கோரி புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

புகார் அளித்ததால் எனக்கு கொலை மிரட்டல் வந்தது. அதனால் நான் அமைதியாக இருந்துவிட்டேன். ஆட்சி மாற்றத்திற்கு பிறகு கே.பி.அன்பழகன் மீது உரிய சாட்சி ஆவணங்களுடன் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் எனது புகார் மீது நடவடிக்கை இல்லை. எனவே, எனது புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தாமோதரன், வழக்கு தொடர்பாக பதிலளிக்க கால அவகாசம் கோரினார். இதையடுத்து, மனுதாரர் அளித்த புகார் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து போலீசார் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை 22ம் தேதி தள்ளிவைத்தார்.

Related Stories:

More