×

பெற்றோரின் கவனக்குறைவால் குழந்தைகளுக்கு 30% விபத்துகள் ஏற்படுகிறது: டாக்டர் வேல்முருகன் தகவல்

சென்னை: சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தைகள் அறுவை சிகிச்சை துறை சார்பில் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் எழிலரசி தலைமை தாங்கினார். அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் வேல்முருகன், மூத்த டாக்டர்கள் செந்தில்நாதன், ஹரிகரன் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில், பட்டாசு விபத்துகள், திராவகம் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் விபத்துகள், பேட்டரி, காந்தங்களை குழந்தைகள் விழுங்குவதால் ஏற்படும் பாதிப்பு, சாலை விபத்துகள், சிறுநீரகம் பாதிப்பு மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகளை தடுப்பது குறித்தும், பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை வழிமுறைகள் குறித்தும் மருத்துவ மாணவர்கள் காணொலி காட்சி மூலமாக குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும் விளக்கினர்.

ஏற்கனவே பல்வேறு விபத்துகளில் காயம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற குழந்தைகளின் புகைப்படங்கள் மூலம், பெற்றோருக்கு டாக்டர்கள், பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது டாக்டர் வேல்முருகன் நிருபர்களிடம் கூறுகையில், ‘குழந்தைகள் வீட்டில் விளையாடினாலும், சாலையில் சென்று விளையாடினாலும், குழந்தைகளை பெற்றோர் தங்களது கண்காணிப்பிலே வைத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு ஏற்படும் விபத்துகளில் 30 சதவீத விபத்துகள் பெற்றோரின் கவனக்குறைவால் மட்டுமே ஏற்படுகிறது. தற்போது அதிகளவில் நடந்து வரும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தவிர்க்க, பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு நல்ல தொடுதல், கெட்ட தொடுதலை கட்டாயம் கற்று கொடுக்க வேண்டும். மேலும் குறிப்பாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் செல்போன், டி.வி பார்ப்பதை தவிர்க்க வேண்டும்’ என்றார்.

Tags : Dr. ,Velmurugan , 30% of accidents in children are due to parental negligence: Dr. Velmurugan Information
× RELATED முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள்!