ரெட் அலர்ட் வாபஸ் சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட்: வானிலை ஆய்வு மைய தலைவர் பேட்டி

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் நேற்று  தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் அளித்த பேட்டி: சென்னையில் இருந்து தெற்கு, தென் கிழக்கே 100 கி.மீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து கிழக்கு, தென் கிழக்கே 120 கி.மீ தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இது கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 18 கி.மீ வேகத்தில் நகர்ந்துள்ளது. தொடர்ந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரிக்கும், சென்னைக்கும் இடையே நாளை (இன்று) அதிகாலை கரையைக் கடக்கக் கூடும்.  இதன் காரணமாக வட கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

செங்கல்பட்டு, சென்னை, புதுச்சேரி, விழுப்புரம் ஆகிய கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றானது மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். தற்போது வரை பெய்த மழையின் கணக்கின்படி நுங்கம்பாக்கத்தில் 34 மி.மீ, மீனம்பாக்கத்தில் 52 மி.மீ, அண்ணா பல்கலைக்கழகத்தில் 44 மி.மீ, சத்தியபாமா பல்கலைக்கழகத்தில் 29 மி.மீ, வில்லிவாக்கம் 38 மி.மீ, செம்பரம்பாக்கம் 37 மி.மீ, திருவண்ணாமலை 8 செ.மீ, புதுச்சேரி 14 செ.மீ, செய்யூர் 9 செ.மீ, கலவை 9 செ.மீ அளவில் பெய்துள்ளது. சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. தற்போது அது விலக்கிக் கொள்ளப்பட்டு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் தொடர் மழை இல்லை. இடைவெளி விட்டு மழை பெய்யும்.

Related Stories: