×

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா 2,668 அடி உயர மலை மீது இன்று மகாதீபம் ஏற்றப்படுகிறது: கொட்டும் மழையில் தீப கொப்பரை மலைக்கு சென்றது; பக்தர்கள் பங்கேற்க கட்டுப்பாடு: போலீஸ் கண்காணிப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் இன்று ஏற்றப்படுகிறது. இதையொட்டி, மலை உச்சிக்கு கொட்டும் மழையில் தீப கொப்பரை கொண்டு சென்று சேர்க்கப்பட்டது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா, கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. கொரோனா பரவல் காரணமாக 2வது ஆண்டாக தீபத்திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதேபோல், மாடவீதியில் நடைபெறும் சுவாமி திருவீதியுலா, வெள்ளித் தேரோட்டம், பஞ்ச ரதங்கள் பவனி ஆகியவையும் ரத்து செய்யப்பட்டன.

அதற்கு மாற்றாக, அண்ணாமலையார் கோயில் 5ம் பிரகாரத்தில் சுவாமி உலா நடந்தது. அதிலும், பக்தர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கவில்லை. மேலும், நேற்று முன்தினம் முதல் நாளை வரை கோயிலுக்குள் செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கிரிவலம் செல்வதும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவதாக அரசு தரப்பில் நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் தீபத்திருவிழா உற்சவத்தின் நிறைவாக இன்று மகாதீப பெருவிழா நடக்கிறது. இதையொட்டி, இன்று அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயில் சுவாமி சன்னதி முன்பு பரணி தீபம் ஏற்றப்படுகிறது.

தொடர்ந்து, மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகாதீபம் ஏற்றப்படுகிறது. இதற்காக நேற்று காலை தொடர் மழையையும் பொருட்படுத்தாமல், திருப்பணியாளர்கள் தோளில் சுமந்தபடி 130 கிலோ எடையுள்ள தீபக் கொப்பரையை மலைக்கு கொண்டு சென்றனர். மேலும், மகாதீபம் ஏற்றுவதற்கு ஆயிரம் மீட்டர் திரி, 3,500 கிலோ நெய் பயன்படுத்தப்படுகிறது. அவை இன்று காலை மலைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில், மகாதீபம் ஏற்றும்போது அண்ணாமலையார் கோயிலில் மாலை 3 மணி முதல் சிறப்பு வழிபாடுகள், பஞ்சமூர்த்திகள் எழுந்தருளல், அர்த்தநாரீஸ்வரர் தரிசனம் ஆகியவை நடைபெறும். ஆனால், அண்ணாமலையார் கோயிலுக்குள் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மலைக்கு செல்லவும் தடை செய்யப்பட்டுள்ளது.

வெளியூர்களில் இருந்து பக்தர்கள் திருவண்ணாமலை நகருக்குள் வருவதை தடுக்க பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதையொட்டி, வடக்கு மண்டல ஐஜி சந்தோஷ்குமார் தலைமையில், 4 டிஐஜிக்கள், 9 எஸ்பிக்கள் உள்பட 5,700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலை நகரை இணைக்கும் 15 சாலை சந்திப்புகளில் செக்போஸ்ட் போடப்பட்டுள்ளது. மேலும், திருவண்ணாமலை நகருக்கு வெளியே 9 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும், நகர எல்லைக்குள் நேற்று முதல் அனுமதிக்கப்படவில்லை. மேலும், அண்ணாமலையார் கோயிலுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாடவீதி, கிரிவலப்பாதை, தற்காலிக பஸ் நிலையங்கள் உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்கள் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. கார்த்திகை மகா தீப விழாவுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் கோயில் மற்றும் வளாகம் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.

Tags : Karthika Fire Festival ,Thiruvannamalai ,Mahadeepam ,Kopparai hill , Karthika Fire Festival in Thiruvannamalai Today Mahadeepam is mounted on a 2,668 ft high mountain: in the pouring rain the lamp went to Kopparai hill; Restriction on participation of devotees: Police surveillance
× RELATED விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர்...