×

வேலை நிறுத்தம் செய்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான வழக்குகளை அரசு ரத்து செய்ததற்கு தடை விதிக்க முடியாது!: ஐகோர்ட் கிளை திட்டவட்டம்

மதுரை: வேலை நிறுத்தம் செய்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான வழக்குகளை அரசு ரத்து செய்ததற்கு தடை விதிக்க ஐகோர்ட் கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர்  தாக்கல் செய்திருந்த பொதுநல வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கடந்த 2017 முதல் 2019 வரை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். குறிப்பாக ஊதிய உயர்வு, பதவி உயர்வு தொடர்பாக 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ என்ற அமைப்பாக இணைந்து பலகட்ட போராட்டங்கள் நடத்தினர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவும் செய்யப்பட்டது. அரசு ஊழியர்களின் போராட்டத்தால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினர். போக்குவரத்துகளும் ஸ்தம்பிக்கப்பட்டது. இது சம்பந்தமாக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்த பின்னர், போராட்டம் கைவிடப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்து, போராட்ட காலத்தில் நிறுத்தப்பட்டிருந்த பதவி உயர்வு, பணப் பலனை வழங்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்நிலையில், இந்த அரசாணை என்பது சட்டவிரோதமானது. பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்து அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இந்த நடவடிக்கைகள் மூலம் அரசு ஊழியர்களின் போராட்டத்தை ஊக்குவிக்கும் விதமாக உள்ளது. எனவே தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. இந்த மனு இன்று நீதிபதி புஷ்பா சத்தியநாராயணன், வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அச்சமயம், போராட்டம் என்பது அரசுக்கு எதிரான போராட்டம். அந்த அரசே கொள்கை ரீதியான முடிவெடுத்து போராட்டக்காரர்கள் மீது போடப்பட்டிருந்த வழக்குகளை ரத்து செய்து, பதவி உயர்வு, பண பலனை வழங்கலாம் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதில் நீதிமன்றம் எவ்வாறு தலையிட்டு தடை உத்தரவு பிறப்பிக்க முடியும்? என்று மனுதாரர் வழக்கறிஞருக்கு நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, போராட்ட காலத்தில் நிறுத்தப்பட்டிருந்த பதவி உயர்வு, பணப் பலனை வழங்க பிறப்பித்த உத்தரவுக்கும் தடையில்லை என்று குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

Tags : Icourt Branch Project Circle , Strike, Government Employees, Icord Branch
× RELATED 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில்...