×

கனமழை பெய்தபோதிலும் தண்ணீரே வராத ஓட்டேரி, அ.கட்டுபடி ஏரி: வேலூரில் புதிய கல்குவாரிகளால் காய்ந்து கிடக்கும் ஏரிகள்

வேலூர்: கனமழை ெபய்தபோதிலும் வேலூரில் புதிய கல்குவாரிகளால் ஓட்டேரி, அ.கட்டுபடி ஏரிகள் காய்ந்து கிடக்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் நீர்நிலைகள் அருகே குவாரிக்கு அனுமதி கொடுத்தது எப்படி? என்று விசாரணை நடத்தி நீர்வழித்தடங்களை மீட்பதோடு, உயிரற்ற ஏரிகள் இனி பிளாட்டுகளாக ஆக்கிரமிக்கப்படும் அபாயத்திற்கு, முற்றுப்புள்ளி வைத்து, நிரந்தர தீர்வு காண வேண்டும் பொதுமக்கள் ேகாரிக்கை வைத்துள்ளனர். வேலூர் மாநகர மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக நகரை ஒட்டி பாலமதி, பள்ள இடையம்பட்டி, நாய்க்கனேரி மலைகளில் இருந்து மழைக்காலங்களில் வழிந்தோடி வரும் மழைநீரை சேகரித்து ஆண்டு முழுவதும் குடிநீர் வினியோகிக்கும் வகையில் ஏறத்தாழ 70 ஏக்கர் பரப்பளவில் செயற்கையாக ஒரு ஏரியை அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கம் உருவாக்கியது. அதுதான் தற்போதுள்ள ஓட்டேரி.

இந்த ஏரியில் 113.84 மில்லியன் லிட்டர் முதல் 140 மில்லியன் லிட்டர் வரை நீரை தேக்கி வைக்க முடியும். இது 45 லட்சம் கனஅடியாகும். இந்த ஏரிக்கு நீரை முறையாக கொண்டு வரும் வகையில் நாய்க்கனேரி கால்வாய், குளவிமேடு கால்வாய், மாந்தோப்பு கால்வாய், கணவாய்மேடு கால்வாய், பாலமதி மலை, ஓட்டேரி மலையில் இருந்து வழிந்தோடி வரும் நீர், ஆண்டு முழுவதும் வழிந்தோடி வரும் ஊற்றுநீர் மற்றும் மழைக்காலங்களில் வரும் நீரை கொண்டு வருவதற்காக நீர்வரத்துக்கால்வாய்களும் அமைக்கப்பட்டன. அதேபோல் ஏரி முழு கொள்ளளவை எட்டி முழுமையாக நிரம்பியவுடன், அதன் உபரிநீரையும் வீணாக்காமல் பலவன்சாத்துக்குப்பம் ஏரிக்கு கொண்டு செல்லும் வகையில் 1.5 கி.மீ தூரத்துக்கு கால்வாய் அமைக்கப்பட்டது. மேலும் அங்கிருந்து தொரப்பாடி ஏரிக்கு ஒரு இணைப்புக்கால்வாயும், தொரப்பாடியில் இருந்து சதுப்பேரிக்கு ஒரு இணைப்பு கால்வாயும் அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியாளரால் அமைக்கப்பட்டது.
அதேபோல் மற்றொரு கால்வாய் சங்கரன்பாளையம் வழியாக விஜயநகர பேரரசால் உருவாக்கப்பட்ட சூரிய குளத்துடன் இணைக்கப்பட்டது. இக்குளம் ஏற்கனவே பகவதி மலை, கோட்டை மலை ஆகிய இடங்களில் இருந்து வரும் நீர்வரத்துக்கால்வாய்களுடன் இணைக்கப்பட்டு அங்கிருந்து நிக்கல்சன்கால்வாய் கோட்டை அகழியுடனுடனும், பாலாற்றுடனும் இணைக்கப்பட்டது.

இத்தகைய நீர்வரத்து மற்றும் உபரிநீர் வெளியேற்றும் கட்டமைப்புகளுடன் உருவாக்கப்பட்ட ஓட்டேரி சில ஆண்டுகளுக்கு முன்பு பெய்த வடகிழக்கு பருவமழையின் போது கடைசியாக முழுமையாக நிரம்பி வழிந்தது. அதன் பிறகு 4 முறை வடகிழக்கு பருவமழை கொட்டித்தீர்த்த போதும் ஓட்டேரி வறண்டே காணப்படுகிறது. தற்போது வடகிழக்கு பருவமழை பெய்தும் ஓட்டேரி காய்ந்து போய் கட்டாந்தரையாகவே காட்சியளிக்கிறது. வேலூர் மற்றும் சுற்றுப்பகுதி மக்களுக்கு ஓட்டேரி முக்கிய நீராதாரமாகவும், இடையம்பட்டி, அ.கட்டுபடி, நாய்க்கனேரி, குளவிமேடு, இடையம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு அ.கட்டுபடி ஏரி முக்கிய நீராதாரமாக விளங்கியது. ஏரி நீரானது, அப்பகுதிகளில் விவசாயத்திற்கும் பயன்படுத்தப்பட்டு வந்தது. அதிமுக ஆட்சி காலத்தில் கனிமவளத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் பலனடைந்ததால் நீர்நிலைகள் அருகே கல்குவாரிகள் அமைக்க அனுமதி கொடுத்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதனால் நீர்வரத்து பகுதிகள் முற்றிலும் தடைபட்டு ஓட்டேரி, அ.கட்டுப்படி ஆகிய ஏரிகள் வறண்டு காணப்படுகிறது.

பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டும் பல நூறு அடி தூரத்தில் உள்ள ஓட்டேரி வறண்டு கிடப்பது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. ஏரிகள் நிரம்பாததற்கு முக்கிய காரணம் புதிய கல்குவாரிகள் தான் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மலைகளில் இருந்து வழிந்தோடி வரும் நீரின் மூலமாக ஓட்டேரி, அ.கட்டுபடி ஏரி நிரம்பி வரும். தற்போது கல்குவாரிகளால் நீர்வழித்தடங்கள் மறிக்கப்பட்டு மழைநீர் திசைதிருப்பி விடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இப்படி நீர்வழித்தடங்களில் புகுந்து விளையாடும் கல்குவாரியினர், அப்பகுதிகளுக்குள் பொதுமக்கள் சென்றால், பாகிஸ்தானுக்குள் நுழைந்தது போல, அடியாட்களை வைத்து மிரட்டல் விடுக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. ஏரிகளுக்கு நீர் வரத்துகளை அழித்துவிட்டு, வரும்காலங்களில் உயிரற்ற ஏரிகள் முழுவதும் பிளாட்டுகளாக ஆக்கிரமிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் நீர்நிலைகளுக்கு அருகே கல்குவாரிகளுக்கு அனுமதி கொடுத்தது எப்படி? என்று உரிய விசாரணை நடத்தி, ஓட்டேரி, அ.கட்டுபடி ஏரிகள் வறண்டு கிடப்பதற்கு நடவடிக்கை மூலம் பதில் சொல்ல வேண்டும் என்று பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதோடு, நீர்நிலைகளுக்கு அருகே உள்ள கல்குவாரிகளின் அனுமதியினை ரத்து செய்ய வேண்டும். மேலும் ஓட்டேரி சுற்றுவட்டாரங்களில் உள்ள மலைகளில் அதிகளவில் மரக்கன்றுகளை நட்டு ஏரிகளை பாதுகாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாக உள்ளது.   

மாநகரில் மாயமான சூரிய குளம்
வேலூர் மாநகரின் மையப்பகுதியில் மாநகராட்சி அலுவலகத்திற்கு அருகே வரலாற்று சிறப்புமிக்க சூரிய குளம் பல ஏக்கர் பரப்பளவில் அழகிய கற்களால் ஆன படிக்கட்டுகளுடன் அமைந்திருந்தது. இந்த குளம் நிரம்பி கோட்டை அகழிக்கு தண்ணீர் செல்லும். ஆனால் தற்போது, சூரியகுளம் இருந்த தடமே தெரியாமல் ஆக்கிரமிப்பு குடியிருப்புகளாகவும், குப்பை மேடாகவும் காட்சியளிக்கிறது. இதேபோன்ற நிலைதான் தண்ணீர் இல்லாத ஏரிகளுக்கும் ஏற்படப்போகிறது என்று வேதனை தெரிவிக்கின்றனர் மக்கள்.

ஓட்டேரி நீரை சுத்திகரித்து வழங்கிய பில்டர்பெட் டேங்க்
ஓட்டேரியில் இருந்து பைப் மூலம் தண்ணீரை சார்பனாமேடு பகுதியில் பில்டர்பெட் டேங்க் என்ற தரைமட்ட சுத்திகரிப்பு தொட்டிகளில் கொண்டு சேர்த்தனர். அதற்கேற்ப ஓட்டேரி மேடான பகுதியிலும், பில்டர்பெட் டேங்க் இறக்கத்திலும் இயற்கையாக அமைந்ததிருந்தன. இங்கு ஒரு தொட்டியில் ஜல்லிக்கற்கள், மற்றொரு தொட்டியில் நிரப்பப்பட்ட அடுப்புக்கரியும், மூன்றாவது தொட்டியில் குளோரினேஷனும் என இயற்கையாக சுத்திகரிக்கப்பட்டு அந்த குடிநீர் மற்றொரு தொட்டியில் சேகரிக்கப்பட்டு அங்கிருந்து நகரம் முழுவதும் மின்சக்தியின்றி வினியோகிக்கப்பட்டது. காரணம், பில்டர்பெட் டேங்க் மேடான பகுதியில் அமைந்திருந்ததுதான். அதனால்தான் அது பில்டர்பெட் டேங்க் என்றும், அது அமைந்த சாலை பில்டர்பெட் சாலை என்றும் அழைக்கப்பட்டது.

குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும்
வேலூர் அடுத்த ஓட்டேரி, அ.கட்டுபடி ஆகிய ஏரிகளுக்கான நீர்வரத்து தடங்களை திசைமாற்றிவிட்டது, அதிகாரிகளுக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பே இல்லை.  இனியாவது, ஓட்டேரி நீர்வரத்து எந்த இடத்தில் திசைமாற்றி விடப்பட்டு தடைபடுத்தப்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து, சம்மந்தப்பட்ட கல்குவாரியினர் மீது நடவடிக்கை எடுக்க, கலெக்டர் குமார வேல்பாண்யடின் குழு அமைத்து, ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும். மேலும் நீர்வளத்துறை அமைச்சர் உள்ள மாவட்டத்திலேயே இதுபோல் ஏரிக்கு செல்லும் நீர்வழித்தடங்கள் மறித்திருப்பதுடன் ஏரிகளே வறண்டு கிடப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே ஓட்டேரி நீர்வழித்தடங்களை மீட்டு, ஓட்டேரி பழையபடி நிரம்பி வழிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Otrey, A. Lake Katara ,Valore , Heavy rain, new quarries
× RELATED வேலூரில் இருவேறு இடங்களில் நடைபெற்ற...