×

மதுரையில் இன்று எம்.பி.க்கள், தெற்கு ரயில்வே அதிகாரிகள் ஆலோசனை: நெல்லையை மையமாகக் கொண்டு புதிய ரயில்வே கோட்டம்?: பயணிகள் எதிர்பார்ப்பு

நெல்லை:  தென் மாவட்ட எம்.பி.க்களுடன் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் இன்று மதுரையில் நடக்கிறது. இதில் தென்மாவட்ட நலனை கருத்தில் கொண்டு புதிய ரயில்கள் இயக்க பரிந்துரைக்க வேண்டும் என பயணிகள் விரும்புகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் பட்ஜெட் பாராளுமன்றத்தில் தாக்கல்  செய்யப்படும். அதற்கு முன்பாக எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், மக்கள் பிரதிநிதிகள், பயணிகள் சங்கங்கள் மற்றும் பல்வேறு  அமைப்புகளின் கோரிக்கையின் அடிப்படையில் புதிய ரயில்கள் இயக்கம், ரயில்  நீட்டிப்பு செய்தல், ரயில்களுக்கான சேவைகளை அதிகரித்து இயக்குதல் உள்ளிட்டவை ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும். ரயில்வே பட்ஜெட்டில், தமிழகத்திற்கு தேவையான திட்டங்கள் மற்றும் ரயில்களை கேட்டுக் பெற, தெற்கு ரயில்வே சார்பில், கோட்ட வாரியான கூட்டங்கள் தற்போது நடந்து வருகின்றன.

தென்மாவட்ட எம்.பி.க்கள் பங்கேற்கும் கூட்டம் இன்று (18ம் தேதி) மதுரையில் தெற்கு ரயில்வே அதிகாரிகள் முன்னிலையில் நடக்கிறது. இக்கூட்டத்தில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்ட எம்.பி.க்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை முன் வைக்கின்றனர். அந்த வகையில் தென்மாவட்ட எம்.பி.க்கள் பல்வேறு கோரிக்கைகளை ரயில்வே அதிகாரிகளிடம் அளித்து பேச உள்ளனர். தென் மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கையான நெல்லையை மையமாக கொண்டு ஒரு ரயில்வே கோட்டம் உள்ளிட்ட பல கோரிக்கைகள் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிகிறது. சென்னையில் இருந்து மதுரை வரும் தேஜாஸ் ரயிலை நெல்லைக்கு நீட்டிக்க வேண்டும்.  குருவாயூர் - புனலூர் ரயிலை தென்காசி வழியாக மதுரைக்கு நீட்டிக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் வேண்டியுதுள்ளது.

மேலும் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு அதிவேகமாக செல்லத்தக்க வகையில் இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்கள் தென்மாவட்டங்களுக்கு இன்னமும் வரவில்லை. குறிப்பாக சென்னை - கன்னியாகுமரி இடையே வந்தே பாரத் புதிய ரயில், ராஜதானி, கரீப் ரத் என்று அழைக்கப்படும் ஏழைகளின் ரதம், சதாப்தி ரயில், துரந்தோ ரயில், ஜனசதாப்தி, இரண்டு அடுக்கு பெட்டி ரயில்களை நெல்லை அல்லது குமரியை மையமாக கொண்டு இயக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளும் எம்பிக்கள் தரப்பில் வைக்கப்பட உள்ளது. வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்ட நிலையிலும், நெல்லையை மையமாக கொண்டு மெமு ரயில் என்பது கனவாக உள்ளது. மதுரை கோட்டத்தில் சென்னைக்கு ரயில்கள் இல்லாத ஒரே வழித்தடமாக நெல்லை - அம்பாசமுத்திரம் - தென்காசி ரயில் வழித்தடம் காணப்படுகிறது.

எனவே இந்த வழித்தடத்தில் நெல்லையில் இருந்து தென்காசி வழியாக ஞாயிற்றுக்கிழமை தோறும் சென்னைக்கு ரயில்கள் இயக்க வேண்டும். மேலும் வியாழக்கிழமை தோறும் நெல்லையில் இருந்து அம்பாசமுத்திரம் தென்காசி ராஜபாளையம் வழியாக கோயம்புத்தூருக்கு ரயில் இயக்க வேண்டும் என்பது பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. சென்னையிலிருந்து மதுரை வரை மின்மயமாக்கல் மற்றும் இரட்டை வழிப் பாதை நிறைவு ெபறும் தருவாயில் உள்ளது. எனவே ரயில்களின் வேகத்தை அதிகப்படுத்தி பயண நேரத்தை குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கிடப்பில் போடப்பட்டுள்ள கிழக்கு ரயில்வே பாதை திட்டம், நெல்லை - சங்கரன்கோவில் புதிய இருப்புபாதை திட்டம் ஆகியவற்றுக்கு உயிரூட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல்லையில் குலவணிகர்புரம், மகராஜநகர் ரயில்வே பாலப்பணிகளை விரைந்து முடிக்கவும் இன்றைய கூட்டத்தில் எம்.பி.க்கள் குரல் கொடுக்க உள்ளனர்.


Tags : Madurai ,Southern Railway ,Nellai , Madurai, Railway Division, Passengers, Expectation
× RELATED மக்களவை தேர்தலை முன்னிட்டு தாம்பரம் –...