ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே ஆம்னி வேன் மீது லாரி மோதி கோர விபத்து!: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு..3 பேர் படுகாயம்..!!

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே ஆம்னி வேன் மீது லாரி மோதிய கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஈரோடு மாவட்டம் சோலங்காபாளையம் அருகே இருக்கக்கூடிய முத்துக்கவுண்டம்பாளையம் என்ற கிராமத்தை சேர்ந்த குமரேசன் மற்றும் அவரது உறவினர்கள் 7 பேர் பழனி கோயியில் சுவாமி தரிசனம் சென்றுவிட்டு ஆம்னி வேனில் திரும்பி கொண்டிருந்த போது சிவகிரி அருகே பாரபாளையம் என்ற இடத்தில் எதிர்பாராத விதமாக ஈரோட்டில் இருந்து சிவகிரி நோக்கி சென்றுக் கொண்டிருந்த லாரி மீது நேருக்கு நேர் மோதினர்.

இந்த கோர விபத்தில் சிக்கி ஆம்னி வேன் முற்றிலுமாக உருக்குலைந்து சேதமானது. இந்த சம்பவத்தில் ஆம்னி வேனில் பயணம் செய்த தெய்வானை, அருக்காணி, புவனேஷ்வரி, தேன்மொழி ஆகிய 4 பெண்கள் மற்றும் ஆம்னி வேன் ஓட்டுநர் படையப்பா உள்ளிட்ட 5 பேர் உடல் நசுக்கி உயிரிழந்துள்ளனர். உடன் பயணித்த குமரேசன், மோகன்குமார் மற்றும் முத்து ஆகிய 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு தற்போது ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த விபத்து தொடர்பாக லாரி ஓட்டுனரை கைது செய்து சிவகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி ஓட்டுநர் மதுபோதையில் வண்டியை ஓட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: