மழையால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள தயார் நிலையில் சென்னை மாநகராட்சி.!

சென்னை: மழையால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்க்கொள்ளும் வகையில் தயார் நிலையில் சென்னை மாநகராட்சி உள்ளது. வெள்ள நீரை வெளியேற்ற 684 ராட்சத மோட்டார் பம்புகள், மக்களை மீட்க படகுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதே நேரத்தில் வடகிழக்கு பருவமழையில் முதல் குறைந்த காற்றழுத்த தாழ்வு ஏற்பட்டு கடந்த 6ம் தேதி முதல் 11ம் தேதி வரை தமிழகம் முழுவதும் மழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் எப்போதும் இல்லாத அளவுக்கு மழை பெய்தது. சென்னையில் தொடர்ச்சியாக பெய்த மழையால் நகர் முழுவதும் வெள்ளக்காடானது. பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு மழைநீரை அகற்றினர்.

இந்த நிலையில் மேலும் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை மற்றும் அதீத கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மழை பெய்தால் மக்கள் பாதிக்கப்படாத நிலையில் முன்எச்சரிக்கை நடவடிக்கையை மாநகராட்சி முடுக்கி விட்டுள்ளது. கடந்த வாரம் பெய்த மழையின் போது மழைநீர் தேங்கிய இடங்கள் மற்றும் தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு அங்கு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்கு தண்ணீர் தேங்காமல் இருக்க 448 மோட்டார் பம்புகள், வாடகைக்கு பெறப்பட்ட 199 மோட்டார் பம்புகள், பிற துறைகளிலிருந்து பெறப்பட்ட 37 மோட்டார் பம்புகள் என மொத்தம் 684 நீர் இறைக்கும் மோட்டார் பம்புகள் பொருத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதில் 100க்கும் அதிகமான எச்.பி.திறன் கொண்ட 22 மோட்டார் பம்புகள், 50க்கும் அதிகமான எச்.பி. திறன் கொண்ட 28 மோட்டார் பம்புகள் அதில் அடங்கும்.

மேலும், தாழ்வான பகுதிகள் மற்றும் கடந்த காலங்களில் மழைநீர் தேங்கிய இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீன் வளர்ச்சித் துறையுடன் இணைந்து படகுகள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் மழையால் மக்கள் பாதிக்கப்பட்டால் அவர்களை மீட்க மாநகராட்சி ஊழியர்கள், தீயணைப்பு துறையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வசதியாக சமூக நலக்கூடங்கள் மாநகராட்சி பள்ளிகள் தயார்படுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு காலை, மாலை, இரவு என 3 வேளையும் சத்தான உணவு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மழை தொடர்பான புகார்கள் மற்றும் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளுக்கு பெருநகர சென்னை மாநகராட்சியின்  1913 என்கின்ற உதவி எண்ணிலும், 044-25619204, 044-25619206, 044-25619207, 044-25619208, 044-25303870 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் 9445477205, 9445025819, 9445025820, 9445025821 என்ற வாட்ஸ் ஆப் எண்களிலும் தொடர்பு கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

Related Stories:

More