×

நெல்லை மாவட்டத்தில் 2.19 லட்சம் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க திட்டம்: வனத்துறை, வேளாண்துறை இணைந்து ஏற்பாடு

நெல்லை:  தமிழக அரசின் நீடித்த பசுமை இயக்கத்தின் கீழ் நெல்லை மாவட்டத்தில் விவசாயிகளிடம் 2 லட்சத்து 19 ஆயிரம் மரக்கன்றுகளை வழங்கி, அவற்றை முறையாக நட்டு பராமரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. வனத்துறையும், வேளாண்துறையும் இணைந்து இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
தமிழகம் முழுவதும் நீடித்த பசுமை இயக்கத்தின் கீழ் விவசாயிகளிடம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டு, அவற்றை  நட்டு பராமரிக்க மானியமும் அளிக்கப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்தில் வேளாண் துறைக்கு உட்பட்ட பாளை, மானூர், முக்கூடல் என 9 வட்டாரங்களில் விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் மரக்கன்றுகளை வளர்க்க பதிவு செய்து காத்திருக்கின்றனர்.

இத்திட்டத்தின் கீழ் வனத்துறை சார்பில் 2 லட்சத்து 19 ஆயிரம் மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. கொக்கிரகுளம் மத்திய நாற்றங்காலில் இருந்து மட்டுமே தேக்கு 50 ஆயிரம், நெல்லி 12 ஆயிரம், குமிழ் 8 ஆயிரம், தோதகத்தி 30 ஆயிரம் என மொத்தம் ஒரு லட்சம் மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு அளிக்கப்பட உள்ளது. இதுதவிர வனத்துறையின் மரக்கன்று நாற்றங்கால் உள்ள பொன்னாக்குடி மற்றும் தட்டாம்பாறை ஆகிய இடங்களில் இருந்து மீதமுள்ள மரக்கன்றுகள் வழங்கப்படும்.

இத்திட்டத்தில் மரம் வளர்க்க நினைக்கும் விவசாயிகள் தங்கள் வளர்க்க விரும்பும் நிலத்தை வேளாண் அதிகாரிகளிடம் காட்டி ஒப்புதல் பெற்று, வனத்துறை பண்ணைகளில் மரக்கன்றுகளை பெற்றுச் செல்ல வேண்டும். கொக்கிரகுளம் மத்திய நாற்றங்காலில் மட்டுமே இதுவரை சுமார் 40 ஆயிரம் மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு விட்டன. விவசாயிகள் மினி லாரிகளில் தினமும் அங்கு வந்து வேளாண்துறையின் ஒப்புதல் சீட்டை காட்டி மரக்கன்றுகளை பெற்றுச் செல்கின்றனர். விவசாயிகள் வளர்க்கும் மரக்கன்றுகளுக்கு ஏற்ப அவர்களுக்கு வேளாண்துறையின் மானியம் வழங்கப்பட உள்ளது.

வெற்று நிலங்களில் விவசாயம்
தமிழக அரசின் பசுமை இயக்கம் காரணமாக பல ஆண்டுகளாக பாழ்பட்டு கிடக்கும் நிலங்களில் கூட விவசாயிகள் மரக்கன்றுகளை நட்டு, வளர்க்க வாய்ப்புகள் உள்ளன. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் ஒரு ஹெக்டேருக்கு 400 மரக்கன்றுகளை பெற்றுக் கொள்ளலாம். வரப்பு பயிராக மரக்கன்றுகளை பயிரிட்டால் 50 மரக்கன்றுகளை பெற்று வளர்க்கலாம்.

Tags : Nellai district ,Forest Department ,Agriculture Department , nellai , saplings, plan
× RELATED மானாவாரி நிலத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்யலாம்: வேளாண்துறை ஆலோசனை