×

திருச்செந்தூர் - நெல்லை ரயில் நேரம் மாற்றம்: பஸ் படிக்கட்டு, ஏணிப்படியில் மாணவர்கள் `திகில் பயணம்’: கூடுதல் பஸ்கள் இயக்க வலியுறுத்தல்

நாசரேத்:  நெல்லை - திருச்செந்தூர் இடையே பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வந்தது. நாசரேத், ஆழ்வார்திருநகரி, செம்பூர், திருக்களூர், வைகுண்டம் பகுதியைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பயன்பெற்று வந்தனர். இதனிடையே கொரோனா காரணமாக நெல்லை - திருச்செந்தூர் பயணிகள் ரயில் நிறுத்தப்பட்டு, நீண்ட இடைவெளிக்குபின் எக்ஸ்பிரஸ் ரயிலாக தற்போது இயக்கப்பட்டு வருகிறது.

வழக்கமாக இந்த ரயில் திருச்செந்தூரில் மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு நாசரேத் ரயில் நிலையத்திற்கு மாலை 5 மணிக்கு வரும். நாசரேத் மற்றும் சுற்றுவட்டார பகுதி மாணவ, மாணவிகள் ரயிலில் பயணித்து வந்தனர். தற்போது இந்த ரயில் திருச்செந்தூரில் மாலை 6.05 மணிக்கு புறப்பட்டு நெல்லை செல்கிறது. இதனால் நாசரேத் பகுதி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் தங்கள் ஊருக்கு செல்ல பஸ் பயணத்தையே நம்பி உள்ளனர். நாசரேத்தில் இருந்து நெல்லைக்கு மாலை 4.30 மணிக்கு அரசு பஸ் செல்கிறது. இதேபோல் மாலை 5.15 மணிக்கு தனியார் பஸ் இயக்கப்படுகிறது.

அரசு பஸ்சை தவறவிடும் மாணவ, மாணவிகள் தனியார் பஸ்சில் செல்லும் நிலையில் பஸ்சில் கூட்டம் அதிகம் காரணமாக படிக்கட்டுகள், பஸ் பின்புறம் உள்ள ஏணிப்படியில் தொங்கியபடி ஆபத்தான நிலையில் பயணத்தை தொடர்கின்றனர்.எனவே மாணவ, மாணவிகள் நலன் கருதி காலை, மாலை நேரத்தில் நாசரேத் - நெல்லை இடையே கூடுதல் பஸ்கள் இயக்கப்பட வேண்டும். மேலும் திருச்செந்தூர் - நெல்லை ரயிலை ஏற்கனவே இயக்கப்பட்ட நேரத்தில் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Thiruchendur ,Nellai , Thiruchendur, Nellai, Bus
× RELATED பள்ளிகள் விடுமுறையையொட்டி...