ரூ.3.30 கோடி பணமோசடி புகாரில் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப்பதிவு.!

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் சாத்தூரைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவர் அளித்த புகாரில், ‘‘நான் சாத்தூரில் எலக்ட்ரானிக்ஸ் கடை நடத்தி வருகிறேன். எனது அக்கா மகனுக்கு விருதுநகரிலுள்ள ஆவின் துறையில் மேலாளர் வேலையை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மூலம் வாங்கி தருவதாக ரூ.30 லட்சத்தை, அதிமுக முன்னாள் கவுன்சிலர் மாரியப்பன் என்பவர் பெற்றார். அந்த பணத்தை மாரியப்பன், ராமுதேவன்பட்டியைச் சேர்ந்த விஜயநல்லதம்பியிடம் அளித்ததாகவும், அவர் அமைச்சரிடம் அளித்ததாகவும் என்னிடம் தெரிவித்தார். என்னிடம் ரூ.30 லட்சம் மோசடி செய்த முன்னாள் அமைச்சர் மீதும், அவரது உதவியாளர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார். இந்த புகாரின் பேரில், விஜயநல்லதம்பி, ராஜேந்திரபாலாஜி, மாரியப்பன் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் ராமுதேவன்பட்டியைச் சேர்ந்த விஜயநல்லதம்பி அளித்த புகாரில், ‘‘ஆவின், உள்ளாட்சி அமைப்புகளில் பணி என பலருக்கு வேலை வாங்கி தருவதாக ரூ.1.50 கோடியை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் அவரது உதவியாளர்கள் பலராமன், பாபுராம், முத்துப்பாண்டி பெற்று கொண்டனர். மேலும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விருதுநகர் வழியே கோவில்பட்டி நிகழ்ச்சிக்கு சென்றபோது, 5,000 பேருடன் பெரிய நிகழ்ச்சியை சாத்தூரில் நடத்தினால், விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் பதவியை பெற்று தருகிறேன் என அமைச்சர் கூறியதால் அதற்கு ரூ.1.50 கோடி வரை செலவழித்ேதன்’’ என்று கூறியிருந்தார். இந்த புகாரின் பேரில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பலராமன், பாபுராம், முத்துப்பாண்டி உட்பட 4 பேர் மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்ஜாமீன் கோரி மனு

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பலருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி, தன்னிடம் ரூ.3 கோடி வரை வாங்கி ஏமாற்றிவிட்டதாக விஜயநல்லதம்பி திடீரென புகார் அளித்தார். இதன் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் ராஜேந்திரபாலாஜி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி ஐகோர்ட் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Related Stories:

More