×

டெல்லியில் தொடர்ந்து காற்று மாசு : அரசு பணியாளர்கள் வீட்டில் இருந்து வேலை செய்ய உத்தரவு

டெல்லி: டெல்லியில் தொடர்ந்து காற்று மாசு மிகவும் மோசமான பிரிவில் தொடர்கிறது. இதனால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. அரசு பணியாளர்கள் வீட்டில் இருந்து வேலை செய்ய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.டெல்லியில் கடந்த ஒரு மாதமாகவே காற்று மாசு அதிகமாக இருந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக நடவடிக்கை எடுக்க கோரி தொடரப்பட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி வி.என்.ரமணா மற்றும் நீதிபதிகள் சந்திரசூட், சூர்யகாந்த ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ‘காற்று மாசு விவகாரத்தில் ஒருசில நடவடிக்கைள் உடனடியாக இருக்கும் என்று நீதிமன்றம் நினைத்தது. ஆனால் தற்போது வரை எதுவும் இல்லை. அரசு அதிகாரத்துவம் முற்றிலும் செயலிழந்து விட்டது. அவர்கள் எதையும் செய்ய விரும்பவில்லை. நீதிமன்றம் ஏதாவது சொல்லட்டும் என்று நினைக்கிறார்கள். நிர்வாகம் செயலிழந்து விட்டது. இது மிகவும் வேதனையாக இருக்கிறது. இந்த விவகாரத்தில் அரசுகளின் செயல்பாடுகள் முழுவதும் அக்கறையின்மையை தெளிவாக காட்டுகிறது’ என்று கடுமையாக தெரிவித்தனர்.

இதையடுத்து காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் விதமாக டெல்லி அரசு அதிரடி அறிவிப்புகளை நேற்று வெளியிட்டது. அதாவது, டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய், மாசுபாட்டை குறைப்பதற்கான அவசர நடவடிக்கைகளை அறிவித்தார். ‘வரும் 21ம் தேதி வரை அரசு துறை பணியாளர்கள் 100 சதவீதம் வீட்டில் இருந்து பணியாற்ற வேண்டும். டெல்லியில் வரும் 21ம் தேதி வரை கட்டுமானம் மற்றும் இடிப்பு பணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பள்ளிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்கள் அடுத்த உத்தரவு வரும் வரை தேசிய தலைநகரில் மூடப்படும்’ என்று ராய் தெரிவித்தார்.

மேலும், காற்று தர மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனைகளை கடுமையாக அமல்படுத்துவதற்கான உயர்மட்ட கூட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம் பேசிய ராய், “அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ளவர்களை தவிர, டெல்லியில் அனைத்து வாகனங்களும் நுழைவதற்கு தடை விதிக்க நாங்கள் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளோம். காவல் துறையும் போக்குவரத்துத் துறையும் இதை ஒன்றாக உறுதி செய்யும்’ என்றார்.இந்நிலையில் இன்று 5வது நாளாக டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து ‘மிகவும் மோசமான’ பிரிவில் தொடர்கிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுறுத்தல்
டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள தேசிய தலைநகர் பிராந்தியத்தில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள், பணிக்கு செல்லும்போது, கூடுமானவரை, அரசு மற்றும் தனியார் வாகனங்களை தவிர்த்து, பஸ், ரயில் போன்ற பொது போக்குவரத்தை பயன்படுத்துமாறு ஒன்றிய பணியாளர் நலத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து அனைத்து ஒன்றிய அரசு துறைகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறும் ஊழியர்களை கேட்டுக்கொண்டுள்ளது.


Tags : Delhi , In Delhi, air pollution, civil servants, home, work, order
× RELATED சிறையில் இருந்து ஆட்சி நடத்த...