காங்கயம் ஒரத்துபாளையம் அணையில் சாயக்கழிவில் வளரும் மீன்களை உண்ணும் வடமாநில தொழிலாளர்கள்: நோய் பரவும் அபாயம்

காங்கயம்: நொய்யல் ஆற்றில் தற்போது வடஇந்திய தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மீன் பிடித்து உண்பதால் தோல் நோய் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலைகளிலும், நொய்யல் ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பெய்த மழையின் காரணமாக தற்போது ஒரத்துப்பாளையம் அணைக்கு வினாடிக்கு 650 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே ஒரத்துபாளையம் அணை அமைந்துள்ளது. இந்த அணை கட்டப்பட்டபோது, சுமார் 7 ஆயிரம் ஏக்கர் பாசன நிலம் பயன்பெறும் என கூறப்பட்டது. ஆனால் தொடர்ச்சியாக திருப்பூர் சாய நீர் நொய்யல் ஆற்றில் திறக்கப்பட்டது. இதனால் அணையில் கடந்த 20 ஆண்டுக்கும் மேலாக பாசன நீர் திறப்பதில்லை.

நொய்யலில் தொடர்ந்து திருப்பூர் சாயப்பட்டறைகளில் இருந்து சுத்திகரிக்காமல் சாய சலவை கழிவு நீரும், கோவை, திருப்பூர் கழிவு நீருமே கலந்து வருகிறது. இதனால்  இந்த நீரை பயன்படுத்துவது இல்லை. தற்போது வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை, திருப்பூர் கோவை மாவட்டத்தில் தொடர்ச்சியாக மலை பெய்து வருவதால், நொய்யலில் மழை நீர் கழிவு நீருடன் கலந்து சென்று கொண்டிருக்கிறது. வருடம் முழுவதும் தண்ணீர் செல்வதால் நொய்யல் ஆற்றில் ஜிலேபி, ஆரால் உள்ளிட்ட மீன்கள் அதிகமாக உள்ளது. இதனால் தினமும் ஒரத்துபாளையம் அணை முன்பாக பொதுமக்கள் மற்றும் வடமாநில தொழிலாளிகள் மீன்பிடித்து வருகின்றனர். இவ்வாறு சாயக்கழிவு நீரில் வளர்ந்த மீன்கள் பிடிக்கப்பட்டு, காங்கயம், சென்னிமலை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சில கடைகளுக்கும், பார்கள் இல்லாத டாஸ்மாக் கடைகளுக்கு அருகிலும் பொரித்து விற்பனை செய்ய வாங்கி செல்வதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 15 வருடங்களுக்கு முன்பு ஒரத்துபாளையம் அணையை திறக்காதே என கீழ்பகுதி விவசாயிகளும், அணையை திறந்து விடு என அணையின் மேற்பகுதி விவசாயிகளும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த உலக புகழ் பெற்ற அணையில், தற்போது செல்லும் நீரில் மீன் பிடித்து விற்பனைக்கு அனுப்புவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி வடமாநில தொழிலாளர் ஒருவர் கூறியதாவது: ஆட்டுக்கறி, நாட்டுக்கோழி விலை அதிகமாக உள்ளது. வேலை இல்லாத நாட்களில் அசைவம் சாப்பிட பணம் அதிகம் செலவாகிறது. ஆற்றில் மீன் பிடித்து அதனை சமைக்கிறோம். இதனால் பணம் மிச்சம் ஆகிறது என தெரிவித்தார்.

Related Stories:

More