மாக்கம்பாளையம் வனச்சாலையில் பாலம், சாலை அமைக்கும் பணிகள் ஆய்வு

சத்தியமங்கலம்: கடம்பூர் மலைப்பகுதியில் மாக்கம்பாளையம் செல்லும் வனச்சாலையில் ஈரோடு கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள மாக்கம்பாளையம், கோவிலூர், கோம்பைதொட்டி, அரிகியம் உள்ளிட்ட  கிராமங்கள் அடர்ந்த வனப்பகுதியில் உள்ளன. இந்த கிராமங்களுக்கு கடம்பூரில் இருந்து மாக்கம்பாளையம் செல்லும் சாலையில் அடர்ந்த வனப்பகுதியில் 11 கி.மீ. தூரம் கரடு முரடான மண் சாலை உள்ளதோடு குரும்பூர் பள்ளம், சக்கரை பள்ளம் என இரண்டு காட்டாறுகளை கடந்து செல்ல வேண்டும்.

கடந்த சில நாட்களாக இப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் இந்த இரண்டு காட்டாறுகளிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன்காரணமாக, மேற்கண்ட நான்கு கிராம மக்கள் அன்றாட தேவைகளுக்கு கடம்பூர் மற்றும் சத்தியமங்கலம் செல்ல முடியாமல் தவித்து வருவதோடு, பள்ளி மாணவர்களும் கல்வி பயில முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இது குறித்து ஆய்வு செய்வதற்காக நேற்று ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கடம்பூர் மலைப்பகுதியில் இருந்து மாக்கம்பாளையம் செல்லும் சாலையில் குரும்பூர் பள்ளம், சக்கரை பள்ளம் ஆகிய இரண்டு காட்டாறுகளின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டுவது குறித்தும், வனப்பகுதியில் உள்ள கரடுமுரடான மண் சாலையை சீரமைப்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். 11 கி.மீ. தூரம் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் உள்ள சாலை வனத்துறைக்கு சொந்தமானது என்பதால் அந்த சாலையை மாவட்ட நிர்வாகம் கையகப்படுத்தி அதற்கு பதிலாக வருவாய் துறையிடம் இருந்து வனத்துறைக்கு நிலம் ஒதுக்குவது சம்பந்தமாக வனத்துறை அதிகாரிகளிடமும், வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கலந்து ஆலோசனை நடத்தினார்.

இதைத்தொடர்ந்து, மலை கிராம மக்களிடம் விரைவில் மாக்கம்பாளையம் கிராமத்திற்கு செல்லும் சாலையில் இரண்டு காட்டாறுகளின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டவும், சாலையை சீரமைத்து தரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.  பின்னர் குன்றி மலை கிராமத்திற்கு சென்ற கலெக்டர் குன்றியிலிருந்து கடம்பூர் செல்லும் சாலையை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் உமாசங்கர், கோபி ஆர்டிஓ பழனிதேவி, சத்தியமங்கலம் தாசில்தார் ரவிசங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர் மணிமாலா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories:

More