ஆன்லைன் ரம்மியால் பறிபோகும் உயிர்கள்!: சென்னையில் ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த கார் ஓட்டுனர் தற்கொலை..!!

சென்னை: சென்னை சேலையூரில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த கார் ஓட்டுனர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். தாம்பரம் அடுத்த ஆனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (30). கார் ஓட்டுநரான இவர், கடந்த ஓராண்டுக்கு முன்பு பிரியா என்பவரை திருமணம் செய்துக் கொண்டுள்ளார். சமீபத்தில் இவருக்கு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது. எப்பொழுதும் செல்போனும் கையுமாக இருக்கும் முருகன், ஆன்லைன் விளையாட்டின் மீது கொண்ட மோகத்தால் நண்பர்கள், உறவினர்களிடம் நகை, பணம் போன்றவற்றை பெற்று ஆன்லைன் ரம்மி விளையாடியுள்ளார்.

ஒருகட்டத்தில் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த முருகன் மிகுந்த வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனி அறையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சியுற்ற தாய், சேலையூர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், முருகனின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் ரம்மி விளையாட பல்வேறு நபர்களிடம் பணம் பெற்று அதனை திருப்பி செலுத்த முடியாததால் இந்த விபரீத முடிவு எடுத்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

திருமணமாகி ஓராண்டு மட்டுமே கடந்துள்ளதால், கார் ஓட்டுனர் முருகன் தற்கொலை தொடர்பாக சேலையூர் போலீசார், தாம்பரம் கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளனர். ஆன்லைன் விளையாட்டு மற்றும் மோசடிகளில் சிக்கி பல இளைஞர்கள் உயிரை மாய்த்து கொள்ளும் நிலையில், கார் ஓட்டுனரின் தற்கொலை அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Related Stories:

More