×

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா: கிரிவலம் செல்ல 20,000 பக்தர்களுக்கு அனுமதி: கோயிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதியில்லை: தமிழக அரசு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலத்துக்கு இன்றும், நாளையும் வெளியூரை சேர்ந்த 15,000 பக்தர்களை அனுமதிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கிரிவலத்துக்கு உள்ளூர் பக்தர்கள் 5 ஆயிரம் பேரையும் அனுமதி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கோயிலுக்குள் பக்தர்களை அனுமதிக்க வாய்ப்பில்லை எனவும் உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியில் கட்டளைதாரர்கள் 300 பேரை அனுமதிக்கலாம் எனவும் தகவல் தெரிவித்துள்ளது. தீபத் திருவிழாவுக்கு 20 லட்சம் பேர் வருவார்கள், 3 லட்சம் பேர் கிரிவலம் செல்வார்கள் என்பதால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது என அரசு கூறியது. கடந்த ஆண்டில் பின்பற்றப்பட்ட நடைமுறைதான் இந்த ஆண்டு பின்பற்றுவதாக தமிழ்நாடு அரசு தரப்பு விளக்கம் அளித்துள்ளது. உரிய பாதுகாப்பு அளித்து அனைத்து பக்தர்களையும் அனுமதிக்கக் கோரி இந்து மக்கள் கட்சி நிர்வாகி செந்தில் குமார் வழக்கு தொடர்ந்திருந்தார்.

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி நவ. 20-ம் தேதி வரை கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்லவும் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 10-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த ஆண்டை போன்றே கோவில் வளாகத்திலேயே சாமி உலா நடைபெற்று வருகிறது. காலையில் விநாயகர், சந்திரசேகரர் உலாவும், இரவில் விநாயகர், முருகர், அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் உலாவும் கோவிலின் 5-ம் பிரகாரத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கமாக தீபத் திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்படும் நாளன்றும், அந்த சமயத்தில் வரும் பவுர்ணமி அன்றும் அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்யவும், மலையை சுற்றி கிரிவலம் செல்லவும் சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு வருகை தருவார்கள்.


Tags : Thiruvannamalai Karthika Deepa Festival ,Kiriwalam ,Government ,Tamil Nadu , Technology and data as new weapons, Prime Minister Modi, text
× RELATED தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும்...