×

பலத்த காற்றுடன் கொந்தளிக்கும் கடல்!: சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் வர தடை விதித்தது காவல்துறை..!!

சென்னை: கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் வர தடை விதித்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது,  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றிருக்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட தமிழகம் - தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதியில் இன்று இரவு நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

சென்னை மெரினா கடற்கரையில் பலத்த காற்றுடன் கடல் கடும் கொந்தளிப்புடன் காணப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல காவல்துறை தடை விதித்துள்ளது. மெரினா கடற்கரைக்கு செல்லக்கூடிய 12 வழிகளையும் போலீசார் அடைத்துள்ளனர். பொதுமக்கள் உள்ளே செல்வதை தடுக்க ஆயுதப்படை போலீசார் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். விட்டுவிட்டு பெய்யும் மழையால் ஆங்காங்கே தேங்கக்கூடிய தண்ணீரை மணற்பரப்பிற்கு உள்ளே சென்று விடக்கூடிய பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டிருக்கின்றனர்.

தொடர்ந்து பட்டினம்பாக்கம் கடற்கரைக்கு செல்லவும் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு, கடற்கரை காமராஜர் சாலையில் செல்லக்கூடிய வாகனங்களை மெதுவாக செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள். தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், சேலையூர், செம்பாக்கம், மேடவாக்கத்தில் பலத்த மழை தொடர்கிறது. மழைநீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Tags : Chennai Marina , Chennai Marina Beach, Public, Prohibition
× RELATED தேர்தல் தினத்தன்று ஊழியர்களுக்கு...