ஆடைக்கு மேல் தொட்டு பாலியல் தொல்லை தந்தால் அது பாலியல் வன்முறைக்கு கீழ் வராது என்ற மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்!!

டெல்லி : ஆடைக்கு மேல் தொட்டு பாலியல் தொல்லை தந்தால் போக்சோ சட்டம் பொருந்தாது என்ற மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, சிறுமிகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் தொடர் கதையாகி வருகிறது. இந்த நிலையில்,  மராட்டியத்தில் 12 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஒருவருக்கு சிறைத்தண்டனை அளிக்கப்பட்ட வழக்கில், மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் அமர்வு அதிர்ச்சிகரமான கருத்து ஒன்றை தெரிவித்திருந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா கனேடிவாலா, skin-to-skin contact with sexual intent அதாவது பாலியல் நோக்கத்துடன் ஒருவரை தோலுடன் தோல் தொடர்பு கொண்டால் மட்டுமே அது பாலியல் வன்முறை என கருத்தில் கொள்ளப்படும் என்றும், mere groping will not fall under sexual assault அதாவது பாலியல் நோக்கத்துடன் விருப்பம் இல்லாத ஒருவரை வெறுமனே ஆடைக்கு மேல் தொட்டு பாலியல் தொந்திரவு கொடுத்தால் அது பாலியல் வன்முறைக்கு கீழ் வராது என்றும் தெரிவித்து இருந்தார். ஆடைக்கு மேல் தொட்டு பாலியல் தொல்லை தந்தால் போக்சோ சட்டம் பொருந்தாது என்றும் நீதிபதி புஷ்பா கனேடிவாலா தீர்ப்பு அளித்து இருந்தார்.

இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதன் மீதான விசாரணையில் இன்று உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், ஆடைமேல் தொட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டாலும் அதுவும் போக்சோ சட்டத்தின் கீழ் வரும் என கூறி மும்பை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.மேலும் குற்றவாளியை சட்டத்தின் ஓட்டைகளில் இருந்து தப்பிக்க அனுமதிக்க கூடாது என்பதே சட்டத்தின் நோக்கம் என்றும் நாக்பூர் நீதிமன்ற தீர்ப்பு சட்ட விதிகளின் அபத்தமான விளக்கத்திற்கு வழிவகுக்கிறது என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.அத்துடன் குற்றவாளிக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் மற்றொரு நபருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையையும் விதித்து தீர்ப்பு வழங்கி உள்ளனர்.

Related Stories:

More