×

அரசு நிலத்தில் அனுமதியின்றி ₹500 கோடிக்கு கிராவல் எடுத்த விவகாரம் ஓபிஎஸ் மீது நடவடிக்கை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு: ஊழல் கண்காணிப்பு ஆணையத்திற்கு புகார் அனுப்பப்பட்டதாக போலீஸ் தகவல்

சென்னை: அரசு நிலத்தில் 500 கோடி ரூபாய் மதிப்பிற்கு அனுமதியின்றி கிராவல் மண் எடுத்ததாக முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரும் புகார் ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.  தேனி மாவட்டம், உப்பார்பட்டியை சேர்ந்த ஞானராஜன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், வட வீரநாயக்கன்பட்டி கிராமத்தில், அரசு நிலங்களிலிருந்து அனுமதியின்றி 500 கோடி ரூபாய் மதிப்பிலான கிராவல் மணலை உதவியாளர்கள் மூலமாக முன்னாள் துணை முதல்வர் பன்னீர்செல்வம் எடுத்துள்ளார். அதிமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இந்த விஷயத்தில் முறைகேடு நடந்துள்ளது. முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தனது உதவியாளர் அன்னபிரகாசம் மற்றும் அவரது உறவினர்கள் மூலம் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். அரசு நிலங்களிலிருந்து மணல் எடுத்த பிறகு, அந்த நிலங்கள் தனியார் சொத்துகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, எனது புகார் மீது உரிய விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி வி.பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் 217 பக்க ஆதாரங்களுடன் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், ஆரம்பகட்ட விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் கோரினார். காவல்துறை தரப்பில் ஆஜரான வக்கீல், ஊழல் கண்காணிப்பு ஆணையரின் ஒப்புதல் பெறுவதற்காக மனுதாரரின் புகார் அனுப்பப்பட்டு நிலுவையில் உள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை 2 மாதங்களுக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags : Anti-Corruption Commission ,Court ,OBS , Action on government land, ₹ 500 crore, on gravel, OPS
× RELATED திமுக தேர்தல் விளம்பரங்களுக்கு...