கோயில் கட்டிடங்கள், நில வாடகை பாக்கி தொடர்பான நிலுவை வழக்கு விவரங்களை அறிக்கையாக அனுப்ப வேண்டும்: மண்டல இணை ஆணையர்களுக்கு கமிஷனர் குமரகுருபரன் மீண்டும் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை  கட்டுப்பாட்டில் 44 ஆயிரம் கோயில்கள் உள்ளன. இக்கோயில்களுக்கு சொந்தமாக 1  லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்கள், 4.78 லட்சம் ஏக்கர் நிலங்கள் உள்ளன.  இவற்றில் 1 லட்சம் கட்டிடங்கள், 1.70 லட்சம் ஏக்கர் நிலங்கள் வாடகை மற்றும்  குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. அவ்வாறு கட்டிடங்கள், நிலங்களின் வாடகை,  மற்றும் குத்தகைதாரர்கள் சிலர் முறையாக வாடகை செலுத்துவதில்லை என்று  கூறப்படுகிறது.  இதில், பலர் லட்சக்கணக்கில் வாடகை பாக்கி நிலுவையில்  வைத்துள்ளதாக தெரிகிறது. தற்போது,  திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில் அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள  சேகர்பாபு, கோயில்களின் வாடகை பாக்கியை வசூல் செய்வதில் தீவிரம் காட்டி  வருகிறார். மேலும், பாக்கி தராமல் இழுத்தடிக்கும் நபர்களை  ஆக்கிரமிப்பாளர்களாக கருதி அகற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.

எனவே, கோயில்களில் வாடகை பாக்கி தொடர்பாக  நிலுவையில் உள்ள வழக்கு விவரங்களை தர அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன்  மண்டல இணை ஆணையர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.  அதில், கடந்த அக்டோபர் 26ம்  தேதி வரையிலான காலத்திற்கு அசையா சொத்தினை கேட்டு வசூல் நிலுவை குறித்த  விவரங்கள் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டும். பெரும்பான்மையான  அலுவலர்களிடம் இருந்து இந்த விவரங்கள் இது நாள் வரை கிடைக்கவில்லை. அசையா  சொத்திற்கான கேட்பு வசூல் நிலுவையில் உள்ள வழக்கு விவரங்கள் குறித்த  அறிக்கையையும் உடன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக  கூறப்பட்டுள்ளது.  எனவே, கேட்பு வசூல் நிலுவை விவரங்களை தர  வேண்டும். இந்த விவரங்களை அலுவலர்களிடம் இருந்து பெற்று அனைத்து சரியானது  என சான்று அளித்து அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: