மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம், புழல் ஏரியில் தலா 2,000 கனஅடி நீர் திறப்பு: 24 மணி நேரமும் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு

சென்னை: கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம், புழல்  ஏரிகளில் இருந்து ஒரே நாளில் தலா 1,500 கன அடியில் இருந்து 2 ஆயிரம் கனஅடியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மழை முன்னெச்சரிக்கையாக நீர்வளத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்ைட-தேர்வாய்கண்டிகை ஆகிய 5 ஏரிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த ஏரிகள் வடகிழக்கு பருவமழை மூலம் கிடைக்கும் நீரை தான் முக்கிய நீர் ஆதாரமாக கொண்டுள்ளது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை கடந்த 26ம் தேதி தொடங்கிய நிலையில், சென்னை, திருவள்ளூர் உட்பட பல்வேறு மாவட்டப்பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த மழை காரணமாக 5 ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. இதனால், கடந்த 7ம் தேதி முதல் 5 ஏரிகளும் நிரம்பியதால், உபரிநீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து, கடந்த 11ம் தேதி மழை சற்று ஓய்ந்த நிலையில் ஏரிக்கு தொடர்ந்து நீர் வரத்து இருந்தது. இதனால், ஏரிகளில் தொடர்ந்து உபரிநீர் திறக்கப்பட்டு வந்தது.

தற்போது, வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நேற்றும், இன்றும் கன மழை ெபய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்ைக விடுத்துள்ளது. இதை தொடர்ந்து ஏரிகளின் பாதுகாப்பு கருதி 3 அடி வரை நீர் இருப்பை குறைக்க திட்டமிடப்பட்டது. இதை தொடர்ந்து நேற்றுமுன்தினம் காலை 11 மணியளவில் செம்பரம்பாக்கம் ஏரி, புழல் ஏரியில் தலா 1000 கன அடி வீதமும், பூண்டி ஏரியில் 7 ஆயிரம் கன அடி வரை நீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து, 2வது நாளாக நேற்று காலை 6 மணியளவில் 1,500 கன அடியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. தொடர்ந்து பிற்பகல் 12 மணியளவில் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் தலா 2 ஆயிரம் கன அடியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்தனர். இந்த நீர் திறப்பால் எந்தவொரு அசம்பாவித சம்பவமும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக நீர்வளத்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

ஏரிகளில் நீர் இருப்பு எவ்வளவு?

* சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரியில் 33.43 (35)  அடி நீர் உள்ளது. இதன் கொள்ளளவு 3231 மில்லியன் கன அடி. நீர் இருப்பு 2648 மில்லியன் கன அடி. வினாடிக்கு 4351 கன அடி வரை நீர்வரத்து உள்ளது. வினாடிக்கு 7036 கன அடி வரை நீர் வெளியேற்றப்படுகிறது.

* புழல் ஏரியில் 18.80 (21.20) அடி நீர் உள்ளது. கொள்ளளவு 3300 மில்லியன் கன அடி. நீர் இருப்பு 2770 மில்லியன் கன அடி. வினாடிக்கு 215 கனஅடி நீர் வருகிறது. வினாடிக்கு 2197 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

* சோழவரம் ஏரி 16.86 (18.86) அடி நீர் உள்ளது. கொள்ளளவு 1081 மில்லியன் கன அடியில் 797 மில்லியன் கன அடி உள்ளது. வினாடிக்கு 215 கன அடி நீர் வரும் நிலையில், அப்படியே வெளியேற்றப்படுகிறது.

* செம்பரம்பாக்கம் ஏரியில் 21.24 (24) அடி உள்ளது. கொள்ளளவு 3645 மில்லியன் கன அடியில் 2919 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. வினாடிக்கு 405 கனஅடி நீர் வரத்து உள்ளது. வினாடிக்கு 2151 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

* தேர்வாய்கண்டிகையில் 500 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. கொள்ளளவு (500 மில்லியன் கன அடி). வினாடிக்கு 150 கன அடி நீர் வௌியேற்றப்படுகிறது.

* தொடர்ந்து 3 அடி நீர் குறைத்து வைக்க வேண்டும் என்பதால் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற்றம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 2 ஏரிகளில் கரையோர பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 2 ஏரிகளின் கரையோரப்பகுதிகளில் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: