நடிகர் சூர்யாவை தாக்கும் நபருக்கு ₹1 லட்சம் அறிவித்த பாமக மாவட்ட செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்

சென்னை:  சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திராவிடர் விடுதலை கழகம் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி நேற்று அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ் சமுதாயத்தின் பிரிவினை சக்தியான ஜாதியம் எப்படி மனிதர்களை பிளவுபடுத்துகிறது என்பதை இருளர் மக்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட கொடுமைகளை திரைப்படம் மூலம் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கும் ஜெய்பீம் படத்தை தயாரித்து நடித்துள்ளார் நடிகர் சூர்யா. ஜாதியை பிரதானமாக வைத்து இயங்கும் பாமக தரப்பில் அதிக மிரட்டல்கள் நடிகர் சூர்யாவிற்கு வந்து கொண்டே உள்ளன.

குறிப்பாக, மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பழனிசாமி நடிகர் சூர்யாவை எட்டி உதைக்கும் இளைஞருக்கு ரூ.1 லட்சம் தருவதாகவும், சூர்யா தரை வழியாக எங்கும் பயணம் செய்ய முடியாது, வான் வழியாக தான் செல்ல முடியும் என்று மிரட்டியுள்ளார். சமூக பதற்றத்தையும் வன்முறையையும் ஜாதிய மோதலையும் இளைஞர்கள் மத்தியில் விதைக்கும் வகையில் திட்டமிட்டு உள்நோக்கத்துடன் பேசியுள்ளார். ஆகவே தமிழ்நாட்டில் வன்முறையை தூண்டும் விதமாகவும், ஜாதிய மோதலை தூண்டும் விதமாகவும் பேசிய பாமக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பழனிசாமி மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: