×

கவரப்பேட்டையில் தெருவில் கிடந்த ரூ.20 ஆயிரம் உரியவரிடம் ஒப்படைப்பு: மாணவனுக்கு ஆசிரியர்கள் பாராட்டு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை தீனதயாளன் நகரை சேர்ந்தவர் டி.தியாகராஜன். இவர் கவரப்பேட்டை பஜாரில் பேன்சி ஸ்டோர் வைத்துள்ளார். இவர் நேற்று கடைக்கு வரும் போது 20ஆயிரம் ரூபாய், கடை சாவியை ஒரு பர்சில் வைத்து பைக் முன் சீட்டில் அந்த பர்சை வைத்து கொண்டு வந்த போது பர்ஸ் கீழே தவறி விழுந்தது. இதை கவனிக்காத தியாகராஜன் கடைக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் அந்த வழியே பள்ளிக்கு நடந்து வந்த கவரப்பேட்டை அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவன் வி.டிவின் அந்த பணம் இருந்த பர்ஸை கண்டெடுத்து அதில் பணம் இருப்பதை கண்டு, பள்ளிக்கு சென்றதும் பள்ளி ஆசிரியரிடம் ஒப்படைத்தான்.

தியாகராஜன் அவரது கடைக்கு சென்றதும் பைக் சீட்டில் பர்ஸ் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்து வழியெல்லாம் பர்சை தேடி கிடைக்காத நிலையில், ஆங்காங்கே விசாரித்து வந்தார். அப்போது சாலையோரம் பழைய பாட்டில்களை சேகரித்து வந்த ஒருவர் பள்ளி மாணவன் ஒருவர் கீழே கிடந்த பர்சை எடுத்ததாக கூறினார். இதனை தொடர்ந்து தியாகராஜன் கவரப்பேட்டை அரசு மேல்நிலை பள்ளிக்கு சென்று விசாரித்த போது, அவரிடம் பள்ளி தலைமை ஆசிரியர் ஐயப்பன் பர்ஸ் மற்றும் உள்ளே இருந்த பொருட்கள், ரூபாய் விபரம் கேட்டு அந்த பர்ஸ் தியாகராஜனுடையது தான் என உறுதி செய்து அந்த பணத்தை மாணவன் வி.டிவின் முன்னிலையில் தியாகராஜனிடம் ஒப்படைத்தார். அப்போது தியாகராஜன் மாணவன் டிவினின் நேர்மையை பாராட்டி நன்றி கூறினார்.

மாணவன் டிவின் கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் பகுதியை சேர்ந்தவர். இவருடைய தந்தை வேலு. தாய் இறந்துவிட்ட சூழலில் மாதர்பாக்கத்தில் இருந்து கவரப்பேட்டைக்கு பள்ளிக்கு வர தினமும் 25 ரூபாய் செலவு செய்ய முடியாத குடும்ப சூழலில் மாணவன் டிவின் கவரப்பேட்டையில் தொன்போஸ்கோ அன்பு இல்ல இலவச மாணவர் விடுதியில் தங்கி பள்ளிக்கு வந்து படித்துள்ளார். ஏழ்மையான குடும்ப சூழலிலும் நேர்மையுடன் நடந்து கொண்ட மாணவன் டிவினின் செயலை பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பாராட்டினர்.

Tags : Kavarappettai , Handing over of Rs. 20,000 lying on the street in Kavarappettai: Teachers praise the student
× RELATED ஆர்.எம்.கே. பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு பரிசுத்தொகை