30 ஆண்டுகளுக்கு பிறகு ஓய்வு தேதியை மாற்ற கோரிய தூய்மைப்பணியாளர்களின் மனுவை நிராகரித்தது சரிதான்: திருவேற்காடு நகராட்சி மேல்முறையீட்டு வழக்கில் ஐகோர்ட் உத்தரவு

சென்னை: திருவேற்காடு நகராட்சியில் கடந்த 1980ம் ஆண்டு ஒபய்யா, மாலக்கொண்டய்யா ஆகியோர் தூய்மைப்பணியாளர்களாக பணியில் சேர்ந்தனர். பணியில் சேரும்போது மருத்துவ அதிகாரி கொடுத்த பிட்னஸ் சான்றிதழை கொடுத்தனர். அதன் அடிப்படையில் இருவரும் 1954ல் பிறந்ததாக அவர்களின் பணி புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், இருவரும் 2014 ஜூன் மற்றும் ஜூலையில் ஓய்வு பெற வேண்டும். இந்நிலையில், தங்களது பிறப்பு சான்றிதழ் இல்லை என்பதால் மருத்துவ சான்றிதழின் அடிப்படையில் தங்களின் வயது 23 என்று பணி புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, தங்களது ஓய்வு தேதியை முறையே 2017 ஜூன் 30 மற்றும் 2018 ஜூன் 30 என்று மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மனுதாரர்கள் இருவரின் ஓய்வு தேதியை மாற்றம் செய்யுமாறு திருவேற்காடு நகராட்சிக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து திருவேற்காடு நகராட்சி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. நகராட்சி சார்பில் வக்கீல் ஆர்.மோன்தாஸ் ஆஜராகி, பிறந்த நாளை மாற்றுவதற்கு பணியில் சேர்ந்த 5 ஆண்டுகளுக்குள் கோர வேண்டும். ஆனால், இருவரும் தாங்கள் ஓய்வு பெறும் போது பிறந்த நாள் மாற்றம் செய்ய கோருகின்றனர்.

30 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் வைத்த கோரிக்கையை திருவேற்காடு நகராட்சி ஆணையர் நிராகரித்தது சரிதான். இருவரும் நகராட்சியிடம் தாங்களே தெரிவித்த தகவலின் அடிப்படையிலேயே அவர்களின் பிறப்பு தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவ சோதனையின் அடிப்படையில் இல்லை. இதை தனி நீதிபதி கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, சாதாரணமாக பிறப்பு தேதியை பணிக்கு சேர்ந்த 5 ஆண்டுகளுக்குள் மாற்றம் செய்ய முடியும். ஆனால், இருவரும் 30 ஆண்டுகள் கழித்து தங்களின் பிறந்த தேதியை மாற்றம் செய்ய கோரியுள்ளதை ஏற்க முடியாது. பல்வேறு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் இதை உறுதி செய்துள்ளது. எனவே, இருவரின் ஓய்வு தேதியை மாற்ற வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.

Related Stories:

More