போதைப்பொருள் கடத்தல் மேலும் ஒரு மலேசிய இந்தியருக்கு தூக்கு: சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவு

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் ஒரு இந்திய வம்சாவளி மலேசியரின் தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், மற்றொரு இந்திய வம்சாவளி மலேசியருக்கு போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் 14 ஆண்டுகளாக வசித்து வரும் இந்திய வம்சாவளி மலேசியரான முனுசாமி ராமமூர்த்தி (39), 57.54 கிராம் ஹெராயின் போதைப்பொருளுடன் 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டார். கிளீனிங் சூப்பர்வைசராக பணி புரியும் இவர், `தனது நண்பர் சரவணன் என்பவர் கைப்பையை கொடுத்து பாதுகாப்பாக வைத்திருக்கும்படி கூறினார்.

2017ம் ஆண்டில் வாங்கியது போல, `பாய்’ என்பவர் பையை வாங்கி கொள்வதாக கூறியதால் அதனை வாங்கி கொண்டேன்,’ என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார். அதே நேரம், போதைப் பொருள் தடுப்பு போலீசார் நடத்திய விசாரணையின் போது, 2017ம் ஆண்டில் சரவணன் இதே போன்று ஒரு பையை கொடுத்ததாகவோ அல்லது வேறு ஒருவர் வந்து வாங்கி கொள்வது பற்றியோ எதுவும் கூறவில்லை. இதனால் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி லிம், முனுசாமியின் வாக்குமூலம் முன்னுக்கு பின் முரணாக உள்ளது. எனவே, பையில் என்ன இருந்தது என்பது பற்றி அவருக்கு ஏற்கனவே தெரியும். தெரிந்தே போதைப்பொருளை கடத்தியதால், அவருக்கு தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டார். ஏற்கனவே, மற்றொரு இந்திய வம்சாவளியை சேர்ந்த நாகேந்திரன் தர்மலிங்கத்துக்கு  தூக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Related Stories: