ஜின்னா சொத்துக்களை கண்டுபிடிக்க ஆணையம்: பாக். உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கராச்சி: ஜின்னாவின் சொத்துக்களை மீட்க ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்து பாக்.நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியா சுதந்திரமடைந்த பிறகு பாகிஸ்தானை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்று முகமது அலி ஜின்னா வலியுறுத்தினார். அவரது விருப்பம் போல் பாகிஸ்தான் தனி நாடாக அறிவிக்கப்பட்டது. இவர் 1948ம் ஆண்டு உயிரிழந்தார். கராச்சியில் வாழ்ந்த இவரது சகோதரி பாத்திமா 1967ல் காலாமானார். இவர்கள் இருவரும் விட்டு சென்ற சொத்துக்கள், வங்கி இருப்பு ஆகியன குறித்து யாருக்கும் விவரம் தெரியவில்லை.

இந்நிலையில், ஜின்னா மற்றும் அவரது சகோதரி விட்டு சென்ற சொத்துக்கள், நகைகள், கார், வங்கி இருப்பு ஆகியவற்றை கண்டுபிடித்து மீட்க கோரி பாத்திமாவின் உறவினர் ஹூசைன் வாலிஜி என்பவர் சிந்த் மாகாண உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘ஜின்னா, பாத்திமாவுக்கு அதிகளவில் சொத்துகள் இருந்தன. அவை என்னவானது என்று தெரியவில்லை. மேலும், அரசு பட்டியலில் உள்ள சொத்துக்களிலும் சில காணாமல் போய் உள்ளது. எனவே, அவர்களின் சொத்துகள் அனைத்தையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்று கோரினார்.

கடந்த 50 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கை சிந்த் உயர் நீதிமன்ற நீதிபதி ‘ஜல்பர் அகமது கான் தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது, ‘ஜின்னா மற்றும் அவரது சகோதரி பாத்திமாவுக்கு சொந்தமான அனைத்து சொத்துகள், நகைகள் ஆகியவற்றை மொத்த அரசு இயந்திரத்தையும் பயன்படுத்தி கண்டுபிடித்து வெளிக் கொணர வேண்டும். இதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி பகீம் அகமது தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிடுகிறோம்,’ என்று தெரிவித்தனர்.

Related Stories:

More