×

சையத் முஷ்டாக் அலி டி20: காலிறுதியில் இன்று தமிழகம் - கேரளா மோதல்

டெல்லி: சையத் முஷ்டாக் அலி  டி20 கோப்பை  தொடரில் இன்று நடைபெறும் காலிறுதியில் தமிழ்நாடு - கேரளா அணிகள் மோதுகின்றன. கடந்த 4ம் தேதி தொடங்கிய இத்தொடரில் மொத்தம் 38 அணிகள் லீக் சுற்றில் விளையாடின. அதைத் தொடர்ந்து காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டங்கள் நடைபெற்ற நிலையில், 8 அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இன்று நடைபெறும்  காலிறுதி ஆட்டங்களில் தமிழ்நாடு - கேரளா,  ராஜஸ்தான் - விதர்பா,  பெங்கால் - கர்நாடகா, குஜராத் - ஐதராபாத் அணிகள் மோத உள்ளன. தமிழ்நாடு-கேரளா மோதும் முதல் காலிறுதி ஆட்டம் இன்று காலை 8.30 மணிக்கு தொடங்கும். விஜய் சங்கர் தலைமையிலான  தமிழக அணி லீக் சுற்றில் விளையாடிய 5 ஆட்டங்களில் ஒன்றில் மட்டும் தோற்று நேரடியாக காலிறுதிக்கு முன்னேறியது. முஷ்டாக் அலி தொடரில் தொடர்ந்து அசத்தி வரும் தமிழக அணி, இத்தொடரின் முதல் சாம்பியன் என்பதோடு  நடப்பு சாம்பியனும் கூட.

அதற்கேற்ப தமிழக வீரர்கள் டி.நடராஜன்,  நாராயணன் ஜெகதீசன், செழியன்  ஹரி நிஷாந்த்,  சாய் சுதர்சன், ஷாருக்கான், சாய் கிஷோர், ரகுபதி சிலம்பரசன், கவுசிக், மணிமாறன் சித்தார்த், முகமது ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இருந்தாலும் வெளிமாநில வீரர்களை கட்டாயம் அணியில் சேர்க்க வேண்டும் என்பதால் கங்கா ஸ்ரீதர் ராஜூ, சஞ்ஜெய் யாதவ், சந்தீப் வாரியர் ஆகியோரில் 2பேருக்கு ஆடும் அணியில் வாய்ப்பு கிடைக்கும்.
சஞ்சு சாம்சன் தலைமையிலான  கேரள அணியிலும் பாசில் தம்பி, சுதேசன் மிதுன்,  சச்சின் பேபி, உன்னிகிருஷ்ணன், சிஜிமோன் ஜோசப் என திறமையான ஆட்டக்காரர்கள் உள்ளனர். ஜலஜ் சக்சேனா, ராபின் உத்தப்பா வெளி மாநில வீரர்களாக வாய்ப்பு பெறுபவார்கள். இந்த இரு அணிகள் கடைசியாக மோதிய 5 டி20 ஆட்டங்களில்  கடைசி 4 ஆட்டங்களிலும் தமிழ்நாடு அபார வெற்றி பெற்றுள்ளது. கேரளா கடைசியாக 2014ம் ஆண்டு நடந்த ஆட்டத்தில் தமிழகத்தை வீழ்த்தியுள்ளது. சமபலம் வாய்ந்த அணிகள் மோதும் இன்றைய காலிறுதியில் அனல் பறப்பது உறுதி.

Tags : Syed Mushtaq Ali ,Tamil Nadu ,Kerala , Syed Mushtaq Ali T20: Tamil Nadu-Kerala clash today in the quarterfinals
× RELATED தமிழகத்தில் பணிபுரியும் பிற மாநில...