மக்களவை முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை உட்பட அதிமுக நிர்வாகிகளின் பள்ளிகளில் ஆவணமின்றி இயங்கிய பஸ்கள் பறிமுதல்: வாணியம்பாடி அருகே அதிகாரிகள் அதிரடி

வாணியம்பாடி: தமிழகம் முழுவதும் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. மேலும் தனியார் பள்ளி பஸ்கள் சீரான முறையில் இயக்கப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதேபோல், திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி நியூடவுன், பெருமாள்பேட்டை, நேதாஜி நகர், ஆலங்காயம், நிம்மியம்பட்டு, வெள்ளக்குட்டை ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது ஆலங்காயம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் வழியாக வந்த தனியார் பள்ளி வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர்.

மேலும், டிரைவர்களிடம், ‘‘பள்ளி வாகனங்களை ஓட்டும்போது சீருடையில் இருக்க வேண்டும், அனைத்து வாகனங்களிலும் முதலுதவி பெட்டி கட்டாயம் இருக்க வேண்டும், பஸ்சில் உதவியாளர் அல்லது கிளீனரை கொண்டு மாணவர்களை பஸ்சில் ஏற்றுவது, இறக்குவது போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். பஸ் படிக்கட்டுகளின் உறுதித்தன்மை ஆகியவற்றை குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை சீரான முறையில் ஆய்வு செய்து பழுது இருந்தால் நிர்வாகத்திடம் தெரிவித்து உடனடியாக சரிசெய்ய வேண்டும்’’ என அறிவுரை வழங்கினர்.

இந்நிலையில் 4 பள்ளிகளின் பஸ்களுக்கு முறையான ஆவணங்கள் இல்லாததும், எப்சி காலம் முடிந்து பல மாதங்கள் ஆனதும் சோதனையில் தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக 4 பள்ளி வாகனங்களை பறிமுதல் செய்து, வாணியம்பாடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதில் மக்களவை முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை, அதிமுக பிரமுகர் லீலா சுப்பிரமணி ஆகியோருக்கு சொந்தமான 2 பஸ்களும் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியின்போது, அதிமுக நிர்வாகிகளுக்கு சொந்தமான தனியார் பள்ளிகளில் இயக்கப்படும் வாகனங்களை அதிகாரிகள் ஆய்வு செய்யாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

Related Stories: