×

வழிகாட்டுகிறது திருப்புல்லாணி ஊராட்சி கடலில் கலக்கும் மழை நீரை ஊரணியில் சேமித்து அசத்தல்: வளம் பெறுகிறது வறட்சி பூமி

கீழக்கரை: மழைநீரை முறையாக சேமித்தால் வறட்சி நீங்கும் என்பதை ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே திருப்புல்லாணி ஊராட்சி நிரூபித்துக் காட்டியுள்ளது. இந்த ஊராட்சியில் மழைக்காலங்களில் வீணாக கடலுக்கு செல்லும் தண்ணீரை பம்ப் செய்து 4 ஊரணிகளில் நிரப்பப்படுகிறது. இதனால் பற்றாக்குறை இல்லாமல் ஆண்டு முழுவதும் தண்ணீர் கிடைக்கிறது. திருப்புல்லாணி கிழக்கு கடற்கரைச் சாலையோரம் உள்ள பொன்னங்கழிக்கானல் ஓடையில் தேங்கும் பல லட்சம் லிட்டர் தண்ணீர் மழைக்காலம்தோறும் வீணாக கடலில் கலந்து வந்தது.

இந்த தண்ணீரை மக்கள் பயன்பாட்டிற்கு மாற்றவும், ஊரின் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும் பொதுமக்கள் இணைந்து பேசி, ஊராட்சி நிர்வாகம் மூலம் நிறைவேற்ற கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிட்டனர். நீர் மேலாண்மை திட்டத்தின்படி, மழை நீரை சேமிப்பதற்கான முன்னேற்பாடுகளை கிராம மக்களுடன், ஊராட்சி நிர்வாகமும் இணைந்து தொடங்கியது. பொன்னங்கழிக்கானல் ஓடையில் தடுப்பணை அமைத்து ஓடையிலிருந்து அரை கிமீ தூரத்திற்கு ஊரணி வரையிலும் கால்வாய்  அமைத்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

பருவமழை துவங்கியதும் இந்த கால்வாய் வழியாக 40 அடி ஆழ கிணறு போன்று அமைக்கப்பட்ட சேமிப்பு கிடங்கிற்கு தண்ணீர் கொண்டு வந்து சேகரிக்கப்படுகிறது. அங்கு 24 மணி நேரமும் இயங்கும் வகையில் இரு மின்சார மோட்டார்கள் உள்ளது. இதன் மூலம் 15 ஏக்கர் பரப்பளவுள்ள ‘‘பெரிய மதகு குட்டம்’’ ஊரணிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.இந்த ஊரணி முழுமையாக நிறைந்ததும், அடுத்ததாக  6 ஏக்கர் பரப்பளவுள்ள ‘‘சக்கர தீர்த்த தெப்பக்குளம்’’, அதைத்தொடர்ந்து 2 ஏக்கர் பரப்புள்ள ‘‘முஸ்லிம் தெரு குட்டம்’’, பின்னர் 12 ஏக்கர் பரப்புள்ள ‘‘பிள்ளையார் குட்டம்’’ என அடுத்தடுத்த ஊரணிகளுக்கும் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு  நிரப்பப்படுகிறது. இதனால் கோடைக்காலத்திலும் ‘‘தண்ணீர் கிராம’’ பெருமையுடன்  திருப்புல்லாணி ஊராட்சி விளங்கி வருகிறது.

திருப்புல்லாணி ஊராட்சி தலைவர் கஜேந்திர மாலா கூறும்போது, ‘‘அரசின் மழைநீர் சேமிப்பு திட்டத்தை முறையாக செயல்படுத்தி வருகிறோம். முந்தைய ஊராட்சி தலைவரை தொடர்ந்து, முன்கூட்டியே திட்டமிட்டு இத்திட்டத்தை  இம்முறை நிறைவேற்றி இருப்பது எதிர்பார்ப்பையும் கடந்து மிகுந்த பலனைத் தந்துள்ளது. பொதுமக்களும், விவசாயிகளும் ஊரணிகள் மூலம் தங்களுக்கு தேவையான நீரை பயன்படுத்தி வருகின்றனர். எங்கள் ஊராட்சியைப் போல, மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் இதேபோன்ற மழைநீர் சேமிப்பு திட்டத்தை  நிறைவேற்றும்போது, ராமநாதபுரம் மாவட்டமே வளமிக்கதாக மாறும்’’  என்றார்.

* தமிழகம் முழுவதும் பின்பற்றலாமே...
தமிழகம் முழுவதும் இந்தாண்டு சராசரியைவிட அதிகளவு மழை பெய்துள்ளது. தொடர்ந்து மாநிலம் முழுவதும் மழை கொட்டி வருகிறது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு, குளங்கள் பெருகின, எரிகள் நிரம்பின என்று செய்திகள் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் பல மாவட்டங்களில் 247 ஏரி, குளங்கள் நீர்வரத்தின்றி வறண்டு போய் இருக்கின்றன. வறண்ட பூமியான ராமநாதபுரத்திலேயே ஒரு ஊராட்சியால் அந்த பகுதியையே சோலையாக மாற்ற முடிந்திருக்கிறது. இதை முன்னுதாரணமாக கொண்டு தமிழகம் முழுவதும் மற்ற மாவட்டங்களில், எங்கெல்லாம் இப்படிப்பட்ட திட்டங்களை செயல்படுத்த முடியும் என்பதை அந்த ஊராட்சிகள் மூலமே திட்டமிடச் செய்து அப்பகுதிகளை வளமாக்கலாம்.

* தடுப்பணைகள் அவசியம்
காவிரி, தென்பெண்ணை, பாலாறு, தாமிரபரணி, கொசஸ்தலை உள்ளிட்ட தமிழக ஆறுகளில் இந்தாண்டு தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெருமளவு தண்ணீர் கடலில் கலந்து வருகிறது. இதை தடுக்க  எங்கெல்லாம் தடுப்பணைகள் கட்ட முடியுமோ அங்கெல்லாம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. தடுப்பணை திட்டங்களை அரசு துரிதமாக நிறைவேற்றி, கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை தேக்கி வைத்து, ஆங்காங்கே உள்ள ஏரி, குளங்களை நிரப்பி விவசாயத்தை செழிக்கச் செய்யலாம் என்று நீர் வளத்துறை நிபுணர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.


Tags : Thirupullani panchayat , Guides to the rainforest
× RELATED போலி சான்றிதழ்களை தடுக்க நடவடிக்கை...