30 ஆயிரத்துக்கு பதில் 10 ஆயிரம் பேர் மட்டுமே தரிசனம் சபரிமலையில் முன்பதிவு பக்தர்கள் வருகை குறைவு: உடனடி அனுமதிக்கு 10 மையங்கள் திறப்பு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று முன்தினம் (16ம் தேதி) முதல் மண்டல கால பூஜைகள் தொடங்கி உள்ளன. மண்டல காலத்தின் முதல் நாளான நேற்று கனமழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள்  தரிசனத்திற்கு வந்திருந்தனர். இருப்பினும் கடந்த ஆண்டுகள் போல பக்தர்களின் வருகை அதிகமாக இல்லை. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு 8 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அதன் பிறகு தந்திரி கண்டரர் மகேஷ் மோகனர் தலைமையில் படிபூஜை நடந்தது. மண்டல, மகர விளக்கு காலங்களில் படிபூஜை நடத்தப்படுவது மிகவும் அபூர்வமாகும். பக்தர்கள் வருகை குறைந்து உள்ளதால் படிபூஜை நடத்தப்பட்டது. நேற்று காலையில் இருந்தே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாதவர்கள் மற்றும் திடீர் என்று சபரிமலை பயணம் மேற்கொள்பவர்கள் வசதிக்காக கேரளாவில் 10 இடங்களில் உடனடி முன் பதிவு வசதி இன்று முதல் தொடங்கப்படுகிறது. குமுளி, எருமேலி, நிலக்கல், திருவனந்தபுரம் ஸ்ரீகண்டேஸ்வரம் மகாதேவர் கோயில், கோட்டயம் ஏற்றுமானூர் மகாதேவர் கோயில், வைக்கம் மகாதேவர் கோயில், கொட்டாரக்கரை மகாகணபதி கோயில், பந்தளம் வலிய கோயிக்கல் கோயில் ,பெரும்பாவூர் தர்ம சாஸ்தா கோயில், பெரும்பாவூர் கீழில்லம் மகாதேவர் கோயில் ஆகிய இடங்களில் பக்தர்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம். பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை காண்பித்து தரிசனத்திற்கு முன்பதிவு செய்யலாம். கோயிலில் தற்போது தினமும் 10 ஆயிரத்திற்கு குறைவான பக்தர்களே தரிசனத்திற்கு வருகின்றனர்.

* அரவணை பற்றி புரளி; தேவசம் போர்டு  புகார்

சபரிமலையில் வழங்கப்படும் அரவணைப் பாயசம் தயாரிப்பதற்கான குத்தகை, இந்து அல்லாத பிற மதத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொடுக்கப்பட்டு உள்ளதாகவும், ஹலால் அரவணை பாயசம் என்ற பெயரில் அது விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் சமூக இணையதளங்களில் தகவல் பரவி வருகிறது. இதை மறுத்துள்ள தேவசம் போர்டு, இந்த தகவலை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீசில் புகார் அளித்துள்ளது.

Related Stories:

More