காற்று மாசு அதிகரிப்பு டெல்லியில் பள்ளி, கல்லூரி மூடல் ஊழியர்களுக்கு ஒர்க் பிரம் ஹோம்: உச்ச நீதிமன்ற கண்டிப்பால் நடவடிக்கை

புதுடெல்லி: காற்று மாசுபாடு விவகாரத்தில் அரசு செயலிழந்து விட்டதாக உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்த பிறகு, டெல்லி அரசு சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பள்ளி, கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. லாரிகள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த ஒரு மாதமாகவே காற்று மாசு அதிகமாக இருந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக நடவடிக்கை எடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா மற்றும் நீதிபதிகள் சந்திரசூட், சூர்யகாந்த் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ‘காற்று மாசு விவகாரத்தில் ஒரு சில உடனடி நடவடிக்கைகள் இருக்கும் என நீதிமன்றம் நினைத்தது. ஆனால் ஒன்றும் தற்போது வரையில் இல்லை. இது எங்களுக்கு அதிருப்தி அளிக்கிறது. அரசு அதிகாரத்துவம் முற்றிலும் செயல் இழந்து விட்டது. அவர்கள் எதனையும் செய்ய விரும்பவில்லை. நீதிமன்றமாக ஏதாவது சொல்லட்டும் என நினைக்கிறார்கள். நிர்வாகம் செயலிழந்து விட்டது. இது மிகவும் வேதனையாக உள்ளது. இந்த விவகாரத்தில் அரசுகளின் செயல்பாடுகள் முழுவதுமாக அக்கறையின்மையை தெளிவாக காண்பிக்கிறது,’ என கடுமையாக கண்டனம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் விதமாக டெல்லி அரசு அதிரடி அறிவிப்புகளை நேற்று வெளியிட்டது.

* ஏற்கனவே அங்கு ஒருவாரம் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை விடப்பட்ட நிலையில் காலவரையின்றி மூடுவதாக அறிவித்தது.

* கட்டுமான பணிகளுக்கும், கட்டிடங்களை இடிக்கவும் 21ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

* டெல்லி அரசு ஊழியர்கள் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை வீட்டில் இருந்து பணியாற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது.

* அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் சரக்கு லாரிகள் தவிர மற்ற லாரிகள் டெல்லிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

* 10, 15 ஆண்டுகள் கடந்த டீசல், பெட்ரோல் வாகனங்களை இயக்கினால் பறிமுதல் செய்ய போலீசாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

* ‘டிவி விவாதங்கள்தான் மாசு’

வழக்கு விசாரணையின் போது தலைமை நீதிபதி ரமணா கூறுகையில், ‘அனைவரையும் விட டிவி விவாதங்கள் அதிக மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன. சில பிரச்னைகளை எடுத்துக் கொள்கிறார்கள், அதைப் பற்றி கவனிக்க வைக்கிறார்கள், அதைப் பற்றி விமர்சனங்களை ஏற்படுத்துகிறார்கள், பிறகு குற்றம்சாட்ட ஆரம்பித்து விடுகிறார்கள். என்ன நடக்கிறது, என்ன பிரச்னை என எதையும் புரிந்து கொள்ளாமல், அவரவர் எண்ணப்படி கருத்து கூறுகிறார்கள். அவர்களை எல்லாம் கட்டுப்படுத்த முடியாது. தீர்வு கிடைக்க வேண்டும் என்பது மட்டும்தான் எங்கள் நோக்கம்’ என கடுமையாக சாடினார்.

Related Stories:

More