×

அஞ்சல் துறையில் முதன்முறையாக ஊழியருக்கு தமிழில் பாராட்டு சான்றிதழ்: மதுரை எம்பி சு.வெங்கடேசன் பெருமிதம்

மதுரை: ‘‘அஞ்சல் துறை வரலாற்றில் முதல் முறையாக தமிழில் பாராட்டு சான்றிதழ் வழங்கியிருப்பது, அஞ்சல் தமிழுக்கு கிடைத்த அடுத்த வெற்றி’’ என்று மதுரை எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: அஞ்சல் அலுவலக பண விடைகள் (மணி ஆர்டர்) சிறு சேமிப்பு படிவங்கள் (ஸ்மால் சேவிங்க்ஸ் பார்ம்ஸ்)  இந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே இருந்ததை சுட்டிக்காட்டி இந்திய ஆட்சிமொழி சட்டங்களின்படி மாநில மொழிக்கான உரிமைகளை பறிப்பதை அனுமதிக்க முடியாது, சட்டத்தை மீறி இந்தி திணிக்கப்படுவதை ஏற்கமாட்டோம் என அமைச்சகத்துக்கு உறுதிபட தெரிவித்தோம்.

அனைத்து படிவங்களும் தமிழில் கிடைக்க வேண்டும் என வலியுறுத்தினோம். இது தொடர்பாக சென்னையில் தலைமை அஞ்சல் பொதுமேலாளரை சந்தித்த போது, அஞ்சல் துறையில் பயன்படுத்தப்படும் அனைத்து படிவங்களும் தமிழில் இருக்கும் என  எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தார். மேலும் ஆட்சிமொழி சட்ட விதிகள் முறையாக பின்பற்றப்படும் என உறுதியளித்தார். இதனடிப்படையில் தமிழகத்தில் இயங்கும் 14 ஆயிரம் அஞ்சலகங்களுக்கும் தமிழ் படிவங்கள் விரைந்து  அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்தனர். தற்போது பல அஞ்சலகங்களுக்கு தமிழில் அச்சடிக்கப்பட்ட படிவங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இதனை பலரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர். தற்போது அடுத்த கட்ட வெற்றி கிடைத்துள்ளது. அஞ்சல்துறை ஊழியர்களுக்கு துறைரீதியாக வழங்கப்படும் பாராட்டு சான்றிதழ், இதுவரை இந்தி மற்றும் ஆங்கில மொழியில் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அஞ்சல்துறை ஊழியருக்கு வரலாற்றில் முதல் முறையாக தமிழ்மொழியில் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இது அஞ்சல் தமிழுக்கு கிடைத்த அடுத்தகட்ட  வெற்றி. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags : Madurai ,MBS ,Venkatesan , Certificate of appreciation in Tamil for the first time employee in the postal service: Madurai MP S. Venkatesh proud
× RELATED திருமணம் உள்ளிட்ட சமூக...