×

புதுச்சேரி குருவிநத்தம் கிராமத்தில் இறந்தவர் உடலை ஆற்றில் இறங்கி சென்று அடக்கம் செய்த மக்கள்

பாகூர்: புதுவை மாநிலம் பாகூர் அடுத்த சோரியாங்குப்பம், குருவிநத்தம், இருளன் சந்தை ஆகிய 3 கிராமப்பகுதிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சோரியாங்குப்பம் பகுதியில் தென்பெண்ணையாற்றின் கரையோரம் சுடுகாடு உள்ளது. குறிப்பாக குருவிநத்தம் கிராமத்தில் சுடுகாடு வசதி இல்லாததால் இறந்தவர்களை ஆற்றின் ஓரம் அடக்கம் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் குருவிநத்தம் பகுதியை சேர்ந்த அன்னதாட்சி (70) என்ற மூதாட்டி நேற்று முன்தினம் உடல்நலைக்குறைவால் உயிரிழந்தார். அவரது இறுதி சடங்கு நேற்று நடைபெற்றது.

தற்போது ஆற்றில் தண்ணீர் அதிகளவில் செல்வதால் உடலை ஆற்றின் மறு கரையில் அடக்கம் செய்ய அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து இடுப்பளவு தண்ணீரில் ஆபத்தான நிலையில் தென்பெண்ணையாற்றில் அன்னதாட்சி உடலை சுமந்து சென்று இறுதி சடங்குகள் செய்தனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது: இப்பகுதிக்கு நிரந்தரமாக சுடுகாடு வசதி இல்லை. யாராவது இறந்தால் ஆற்றின் கரையில் தான் புதைக்க வேண்டியுள்ளது. இதுதொடர்பாக நாங்கள் கவர்னர், முதல்வர், தொகுதி எம்எல்ஏ, எம்.பி. என அனைவரிடம் கோரிக்கை வைத்து பார்த்துவிட்டோம். எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதிகாரிகளிடம் இதுபற்றி கேட்ட போது அரசிடம் நிதி இருந்தால் உடனே சுடுகாட்டுக்கு செல்ல பாதை வசதி செய்து தரப்படும் என்று கூறுகிறார்கள். நிதி இல்லாததால் தொடர்ந்து காலம் தாமதமாகி வருகிறது என்று அதிகாரிகள் தட்டி கழித்து வருகின்றனர். எனவே அரசு உடனே இதற்கு தீர்வு காண வேண்டும் என்றனர்.

Tags : Kuruvinatham ,Pondicherry , People who went down to the river and buried the body of the deceased in Kuruvinatham village, Pondicherry
× RELATED வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய பகுதிகளில்...