மழைக்கால நோய்களை தடுக்க நீரை கொதிக்கவைத்து குடிக்கவும்: சென்னை மாநகராட்சி வேண்டுகோள்

சென்னை: சென்னை மாநகராட்சி பொசு சுகாதாரத்துறை அறிக்கையில் கூறியிருப்பதாவது: மழைக்காலங்களில் வயிற்றுப்போக்கு, காலரா, மஞ்சள் காமாலை, டைபாய்டு போன்ற நோய்கள் வராமல் தடுக்க, குடிநீரை கொதிக்க வைத்து ஆற வைத்து குடிக்கவேண்டும். உணவு உட்கொள்ளும் முன்பும் கழிவறையை பயன்படுத்திய பிறகும் சோப்பு உபயோகப்படுத்தி  முறையாக 20 நொடிகள் கைகளை தேய்த்து கழுவ வேண்டும். வீட்டிற்கு வெளியில் செல்லும் போது காலணிகளை அணிந்து செல்லவும், வீட்டிற்கு வெளியில் சென்று வந்த ஒவ்வொரு முறையும் கை, கால்களை சோப்பு தேய்த்து கழுவவும்.

சென்னை குடிநீர் வாரியத்தின் குடிநீர் வழங்கும் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் பம்புகளில் தேங்கிய நீரை குடிநீராக பயன்படுத்துவதை தவிர்க்கவும். சாலையோரங்களில் விற்கப்படும் ஈ மொய்த்த மற்றும் தூசு படிந்த உணவு பண்டங்களை உண்பதை தவிர்க்கவும். சமைத்தவுடன் உணவினை சூடான நிலையிலேயே சாப்பிடவும், பழைய உணவினை சாப்பிடுவதை தவிர்க்கவும், திறந்த வெளியில் மலம், சிறுநீர் கழிப்பதை தவிர்த்து பொது கழிப்பிடங்களை மட்டுமே பயன்படுத்தவேண்டும்.

காய்ச்சல் மற்றும் வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை, மாநகர ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள மருத்துவரிடம் முறையான சிகிச்சை பெறவும், சுய சிகிச்சை செய்யக்கூடாது. வயிற்றுப்போக்கு, வாந்தி பேதி ஏற்பட்டதால் உப்பு, சர்க்கரை கரைசல் மற்றும் வீட்டில் உள்ள நீர் ஆகாரங்களை அடிக்கடி பருகவும். தங்கள் வீட்டில் உள்ள மேல்நிலை, கீழ்நிலை தொட்டிகளை வாரம் ஒரு முறை பிளீச்சிங் பவுடர் கொண்டு நன்கு தேய்த்து கழுவி உலர வைத்து பயன்படுத்த வேண்டும்.

வீட்டின் திறந்த மேல்தளம் மற்றும் வீட்டை சுற்றியும் மழைநீர் தேங்க வாய்ப்புள்ள அனைத்து தேவையற்ற பொருட்களையும் அகற்றி, கொசு உற்பத்தி ஆகாமல் தடுக்கவும். சுகாதாரத்தை காக்க சுற்றுப் புறத்தினை தூய்மையாக பராமரிக்க வேண்டும். மேலும் புகார் மற்றும் கூடுதல் தகவல்களுக்கு 1913 அவசர உதவி மற்றும் சிகிச்சைக்கு மாநகராட்சி தொற்றுநோய் மருத்துவமனை தண்டையார் பேட்டை 044-25912686/88 மற்றும் 108 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More