வீட்டு வாசலுக்கே வரும் ரேஷன் பொருட்கள்!: அசத்தல் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மம்தா பானர்ஜி..!!

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் துவரே ரேஷன் திட்டத்தை அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தொடங்கி வைத்தார். மேற்குவங்க மாநிலத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றது. அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் மாநிலம் முழுவதும் பொதுமக்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் துவரே ரேஷன் என்ற திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன் முன்னோட்டமாக கடந்த செப்டம்பர் மாதம் சுமார் 3 ஆயிரம் ரேஷன் பணியாளர்கள் மூலம் சிறிய அளவில் இந்த திட்டத்தை செயல்படுத்தியது. அதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது இந்த திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, துவரே ரேஷன் திட்டத்தை நேற்று தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் 10 கோடிக்கும் அதிகமான மக்கள் பயனடைவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். நாட்டிலேயே இது ஒரு முன்னோடியான திட்டம் என தெரிவித்தார்.

ரேஷன் டீலர்களுக்கான கமிஷன் தொகையை குவிண்டால் ஒன்றுக்கு 75 ரூபாயிலிருந்து 150 ரூபாயக உயர்த்தவும் அரசு முடிவு செய்துள்ளது. இப்போதைக்கு ஒரு தெருவை நான்கு பகுதிகளாகப் பிரித்து, ரேஷன் விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மக்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டு விநியோகம் நடைபெறும் என அரசு கூறியுள்ளது.

Related Stories: