×

பவானி நகராட்சி பகுதியில் கரைபுரண்டு ஓடும் காவிரி வெள்ளம்

பவானி: மேட்டூர் அணை நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டதால் பவானி நகராட்சி பகுதியில் கரையோரத்தில் உள்ள வீடுகளை அருகாமையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது பவானி நகரில் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள காவேரி நகர், கந்தன் நகர், தினசரி மார்க்கெட், மீனவர் தெரு, பாலக்கரை வீதி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் புகுந்து பாதிப்பு ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. காவிரிக் கரைக்கு மிக அருகாமையில் உள்ள இப்பகுதி மக்கள் வெள்ளம் வரும்போது வீட்டைவிட்டு வெளியேறுவதும் வெள்ளம் வடிந்த பின்னர் குடியேறுவதுமாக உள்ளனர்.

பவானி ஆற்றில் வெள்ளம் வரும்போது சோமசுந்தரம், பழனிபுரம், சீனிவாசபுரம் எக்ஸ்டென்ஷன், பழைய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் கரையோரப் பகுதி மக்கள் பாதிக்கப்படுவர். தற்போது மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 40 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், பவானி நகராட்சிப் பகுதியில் கரையோரத்தில் உள்ள படித்துறைகளை மூழ்கியபடி தண்ணீர் செல்கிறது.

தற்போது கரைகளைத் தொட்டபடி தண்ணீர் பெருக்கெடுத்து செல்லும் நிலையில், உபரிநீர் வினாடிக்கு 70 ஆயிரம் கன அடிக்கு மேல் செல்லும்போது கரையோர வீடுகளை தண்ணீர் சூழும் நிலை ஏற்படும். மேட்டூர் அணைக்கு வரும் உபரி நீர் முழுமையாக திறக்கப்படுவதால் ஈரோடு மாவட்ட நிர்வாகம் காவிரி கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. காவிரியில் பெருக்கெடுத்தோடும் வெள்ளத்தை பலர் வேடிக்கை பார்ப்பதோடு செல்பி எடுத்தும் செல்கின்றனர்.

Tags : Bhavani , Bhavani Municipality
× RELATED பாவங்களைப் போக்கும் பவானி அம்மன்