கொடைக்கானல் மலைச்சாலையில் உருண்டு விழுந்தது ராட்சத பாறை: வெடி வைத்து தகர்க்கும் பணி தீவிரம்

பெரியகுளம்: பெரியகுளம் அருகே அடுக்கம் - கொடைக்கானல் மலைச்சாலையில் உருண்டு விழுந்த ராட்சத பாறையை வெடி வைத்து தகர்க்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையால், இரண்டு வாரங்களுக்கு முன்பு பெரியகுளத்திலிருந்து அடுக்கம் வழியாக கொடைக்கானல் செல்லும் சாலையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தன. மண்சரிவும் ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறையினர் பாறைகள், மண்சரிவை அகற்றி, சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால், அடுக்கம் கிராமத்திற்கு கீழ் உள்ள சாலையில் ராட்சத பாறை உருண்டு விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து திண்டுக்கல் கோட்ட நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் மதன்குமார் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்து, ராட்சத பாறையை வெடி வைத்து தகர்க்கும் பணியை துவக்கினார். முதல் வெடியில் பாறை முற்றிலும் தகர்க்கப்படாததால், மீண்டும் பாறையை வெடி வைத்து தகர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று மாலைக்குள் ராட்சத பாறையை அப்புறப்படுத்தி இருசக்கர வாகனங்கள் போக்குவரத்திற்கு ஏற்றவாறு சாலையை சீரமைக்க உள்ளதாக திண்டுக்கல் கோட்ட நெடுஞ்சாலைத்துறை செயற்பொறியாளர் தெரிவித்தார்.

Related Stories:

More