சுவாமியே...சரணம் ஐயப்பா!: கார்த்திகை மாத பிறப்பை ஒட்டி அதிகாலையிலேயே மாலை அணிந்து 41 நாள் விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்..!!

நாகர்கோவில்: கார்த்திகை மாத பிறப்பை ஒட்டி ஐயப்பனை வழிபடுவதற்காக சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள், மாலை அணிந்து தங்களது விரதத்தை தொடங்கியுள்ளனர். ஆண்டுதோறும் கார்த்திகை 1ம் தேதி சபரிமலை செல்வதற்காக ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து 41 நாட்கள் விரதத்தை தொடங்குவது வழக்கம். அதன்படி நாகர்கோவில் பார்வதிபுரத்தில் உள்ள ஐய்யப்பன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் அதிகாலையிலேயே சுவாமியை தரிசித்து மாலையிட்டு தங்களது விரதத்தை தொடங்கினர். கோயில் தந்திரி அவர்களுக்கு மாலை அணிவித்து விரதத்தை தொடங்கி வைத்தார். ஐயப்பனை தரிசிக்க பெருவழிப்பாதையில் செல்லவும் அனுமதிக்க வேண்டும் என்று கேரள அரசை பக்தர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் ஐயப்ப பக்தர்கள் அதிகாலையிலேயே நீராடிவிட்டு கருப்பு வேஷ்டி அணிந்து கோயில்களுக்கு சென்று மாலை போட்டுக்கொண்டனர். அங்குள்ள ஐயப்பன் மற்றும் நாடியம்மன் கோயில்களில் குருசாமிகள் பக்தர்களுக்கு மாலைகளை அணிவித்தனர். வழக்கத்தை விட இந்த ஆண்டு குறைவான பக்தர்களே காணப்பட்டனர். அப்போது சுவாமியே சரணம் என்று முழக்கம் எழுப்பி, ஐயப்பனை வழிபட்டனர். சபரிமலையில்  ஐயப்பனை வழிபட நாள் ஒன்றுக்கு 30,000 பக்தர்களை மட்டுமே தேவசம் போர்ட் அனுமதித்துள்ளது. இந்த எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வடசபரி என்று அழைக்கப்படும் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஐயப்பன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று காலையில் மாலை அணிந்துகொண்டனர். அப்போது முன்பின் பழக்கம் இல்லாதவர்களும் தங்களை அறிமுகப்படுத்தி ஒருவருக்கொருவர் வணங்கி கொண்டனர். தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் இன்று காலை ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.

எனினும் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்படாதது அவர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாக வேதனை தெரிவித்தனர். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக குற்றாலம் அருவிகளில் நீராட மக்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஆனால் ஐயப்ப பக்தர்களுக்கு மட்டுமாவது குளிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More